வியாழன், 8 ஆகஸ்ட், 2024

தங்கப்பதக்கம்.

 

தங்கப்பதக்கம்.

____________________________________

ருத்ரா


ஒலிம்பிக் சுடர் வீசும்

ஒளிக்கதிர்களில்

ஒரு கதிரியக்கத்தை 

பரவச்செய்த‌

ஒரு எரிமலை மங்கையே!

உன் விரல் நுனி 

வருடலில் உனக்கு வரக்காத்திருந்த‌

தங்க மெடலை

தடுப்பதற்கு

அந்த சிலந்திவலையை

பின்னியது யார்?

தேசமாவது பக்தியாவது?

என்று உள்ளே கருவறுத்துக்கொண்டு

தேசக்கொடி அசைப்பவர்களும்

கடவுளாவது மண்ணாங்கட்டியாவது

என்று உள்ளே 

மக்களை தின்று அழிப்பவர்கள் கூட‌

கடவுள் அரிதாரம் பூசிக்கொண்டு

ஆதிக்கம் செலுத்துபவர்களும்

பெருகிப்போன தேசம் இது.

இத்தனை கோடி மக்கள் என்று

தாங்கமாட்டாத கனமான‌

புள்ளிவிவரங்களைக்கொண்ட‌

தேசமும் தான் இந்த தேசம்.

தேசிய விளையாட்டு பெருமிதம் 

எள்ளளவும் இல்லாத தேசம் இது.

மக்களிடம் 

ஒன்றே இறைவன் 

இறைவனும் மனிதனே

மனிதனும் இறைவனே

என்ற மகத்தான சிந்தனைகள் 

இருந்த போதிலும்

ஆதிக்கம் செலுத்த நினைத்த‌

சிறுகும்பல்

சூழ்ச்சி தந்திரம் வன்மம்

என்பதன் மூலம்

பலப்பல சாதிகளை உருவாக்கி

இந்த தேசத்தை

மனிதனை மனிதனே சுரண்டும் ஒரு

பழமையின் முடைநாற்றம் வீசும்

தேசமாக ஆக்கி முடக்கி வைத்திருக்கின்றது.

விரிந்த பரந்த மனித சிந்தனையும்

அறிவும் அன்பும் பண்பும் 

மனிதம் பூத்து

படர்ந்து இழையும் தேசமாக மாறும் வரை

இது வெறும்

ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்

விற்கக்கூவும் 

மந்திர இரைச்சல்களின் தேசமாகத்தான்

இருக்கும்.

ஒலிம்பிக்காவது? கிலிம்பிக்காவது?

போய் கும்பமேளா கூட்டத்திலே போய்

கங்கையை சாக்கடையாக்கும்

திருப்பணியில் ஈடுபடுங்கள்.

நூற்றாண்டு நூற்றாண்டுகளாக‌

அறிவின் வாசனையே அற்ற தேசத்தில்

எங்கிருந்து

வெளிச்சம் முளைக்கும்.

சிந்தியுங்கள் மக்களே!

சிந்தியுங்கள்!


____________________________________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக