வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

கள்ளக்குளி

 

கள்ளக்குளி

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________

சொற்கீரன்



இது என்ன சொல் என்று

மிரண்டு விடாதீர்கள்.

எங்கள் கல்லிடைக்குறிச்சி 

தேசத்தில்

தாமிரபரணிதான் எப்போதும்

கொடி சுற்றிக்கொண்டு கிடக்கும்.

கன்னடியன் கால்வாய் தான்

புகழ் பெற்ற எங்கள் சூயஸ் கால்வாய்.

ஒவ்வொரு பாலத்திலிருந்தும்

விரால் பாய்ந்து

அந்த பச்சைப்பளிங்கு நீர்

பிழம்புக்குள்

முக்குளி போட்டு முக்குளி போட்டு

தண்ணீர்ப்பாசிகளின் 

நீண்ட கூந்தலுடன்

பின்னி பின்னி விளையாடிவிட்டு

கால்களினூடூ

விரையும் தண்ணீர்ப் பாம்புகளோடும்

சமரசம் செய்து கொண்டு போகும்போது

எங்கள் குமாரர் கோவில் தெருவில்

எங்கோ ஒரு மூலையிலிருந்து

"மந்திரிகுமாரியின்" 

வாராய் நீ வாராய் என்ற பாட்டு

மிதந்து மிதந்து வந்து

எங்களோடு பிசைந்து

இனிமையை பிழிந்து ஊற்றி

ஜலக்கிரீடை செய்யும்.

வாய்க்காலின்

பத்து பன்னிரெண்டு பாலங்களில்

கடைக்கோடி பாலம் வரைக்கும்

நீர்ப்பயணம் செய்து

கரையேறுவோம்

கொழுக்கு மொழுக்கென்று

அம்மணங்குண்டிகளாய்.

ஏழெட்டு வயதுகளின்

மின்னல் குஞ்சு விளையாட்டுகள் இவை.

எங்கள் கால் சட்டைகளை 

அந்த வாய்க்காங்கரை

குத்துக்கல் கண்களில்

செருகி வைத்திருப்போம்.

கண்கள் செவ செவ என்று

ஆகியிருக்கும்.

ஒரு சிரட்டைப்பயல்

ஐடியா குடுப்பான்.

வெயிலில் சுட்டுப்பொசுக்கும் 

கூழாங்கற்களை

கண்ணில் ஒற்றி ஒற்றி எடு

என்பான்.

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து

"ஐம்பது"களின்

எங்கள் விக்கிர்மாதித்தன் 

வீர விளையாட்டுகள்

இவை.

வகுப்புகளுக்கு கூட‌

கட் அடித்து விட்டு

இந்த வாட்டர் ஒலிம்பிக்ஸின்

விருதுகளுக்கு

எத்தனை எத்தனை வேட்கைகள்

எங்களிடையே.

விருதுகளாய்

பூவரச இலைகளை சுருட்டி

பீப்பி செய்து தருவான் ஒருத்தன்.

அந்த ஒலி எங்கள்

பிஞ்சு நரம்புகளுக்குள்ளும்

வீர யாழ் இசைக்கும்.

வீட்டுக்குத்தெரிந்தால்

முதுகு பிஞ்சுடுமே.

அப்ப..

இது "கள்ளக்குளி" தானே!

____________________________________________








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக