வெள்ளி, 1 மே, 2026

இனிய தோழா!

 

இனிய தோழா!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________
சொற்கீரன்
வெறும் எட்டு மணி நேர வேலைக்கு
போராடிய தினமா அது?
அதற்கு சிந்திய ரத்தம் என்பதன்
அர்த்தம் கூட‌
இன்று அர்த்தம் கெட்டுப்போன‌
அவலமா இந்த மே தினம்?
பன்னிரெண்டு மணி நேர வேலை
மற்றும்
கணிப்பொறி வினைஞர்கள்
அந்த எந்திரத்தோடேயே
தங்கள் இதயம் அறிவு
மன எழுச்சி எல்லாவற்றையும்
தைத்துப்போட்ட நிலை...
இவையெல்லாம்
வெறும் பங்கு மூலதன
தொப்பூள் கொடியுடன்பின்னிக்கொண்ட‌
மரத்த நிலை...
என்று இன்றைய
உழைப்பாளர் அறிவாளர் நிலை
எல்லாம் ஒரு மக்கிய நிலைக்குள்
வீழ்ந்து கிடக்கிறது.
இவற்றோடு
செயற்கை மூளை என்றொரு பூதம்
"மனிதம்"என்கிற‌
மாண்பினை
தின்றே தீர்த்து விட்டது.
இந்த பின்னணியில்
ஜனநாயகம் என்பதும் கூட‌
"க்யூபிட்"கணித வேட்டைக்குள்
செயலிழந்த ஒரு "கோமா"க்குகைக்குள் தான்
கிடக்கிறது.
என் இனிய தோழனே!
உன் அடிக்குரலில் அந்த‌
குரல் கேட்கிறதா?
ஒன்று படு தோழா!
இதில் இன்னும் நீ இழக்கப்போவது
உன் டிஜிடல் விலங்குகளையும் சேர்த்து தான்
என்பது
உனக்கு கேட்கிறதா?
இந்த அறிவு நுட்பம் கூட‌
உன் மூளை வியர்த்த‌
மூலதனத் திரட்சிதானே!
உன் பொருள்முதல் சிந்தனையின்
தீப்பொறி வெளிச்சம் தானே!
எழுச்சி கொள் தோழா!
மே முதல் நாள்
உன் பூர்த்தி செய்யப்படாத‌
வரலாற்று சாசனத்தின்
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் தான்.
எழுச்சி கொள்
என் இனிய தோழா!
எழுச்சி கொள்!
_________________________________________________
சொற்கீரன்