அரிதாரம்
_________________________________________
எத்தனை
அரிதாரம் தான் பூசுவாய்?
பாத்திரங்கள்
வண்டி வண்டியாய்
கொண்டு வருகிறாய்.
உள் மனம் கண்ணைத் திறந்து
வைத்துக்கொண்டு
உன்னை பார்த்ததெல்லாம்
உனக்கு அழகானவை.
உன்னை மெருகேற்றியவை.
உனக்கு
உணமை என்னும் உறைபொருளை
உரைத்து உரைத்து
சொன்னவை.
அப்புறம் திடீரென்று
உன்னை உன்னிட்மே
மறைத்துக்கொண்டாய்.
பளிங்கு உள்ளம் உடைந்து
சுக்கு நூறானது.
அப்போது தான்
வித் விதமான
முகமூடிகளை வாங்கிக்கொள்ள
நீயே
உன் மனதோரமாய்
ஓரம் கட்டிய பிளாட்பார சந்தைகளில்
கடைவிரித்தாய்.
புதிது புதிதாக அவற்றை
மாட்டிக்கொண்டாய்.
ஆம்.
வாழ்க்கை எனும் கடினமான
பாதை உன்னை
களைப்படையச்செய்து
வீழ்த்தி விட்டது.
உன்னைச்சுற்றிய முரண்பாடுகளின்
முரட்டுத் தாக்குதல்களுக்கு
இரையாகிப்போனாய்.
உடன் வாழ்பவர்களின் கூட்டம்
பரபரப்புகளையும்
பளபளப்புகளையும்
வண்ண வண்ண வசீகரங்களையும்
கோரைப்பற்சக்கரங்களின்
நற நறப்பில்
தாற்காலிக அரசியல் லாபங்களையும்
கூடவே
வேப்பிலை அடிக்கும்
சாதி மத தந்திர சூழ்ச்சிகளையும்
உன்னைச்சுற்றி
கழுத்து நெரிக்கும்
அனக்கொண்டா பாம்புகளாய்
ஆக்கிக்கொண்ட உன்
வாழ்க்கையின் பதட்டங்களையும்
அந்த முகமூடிகள்
அற்புதமாய் ஏந்திக்கொண்டன.
உன் ஆட்டம் எது வரை போகும்?
அடிப்படையான
அன்பு நெகிழ்ச்சியின்
மனிதம் எனும் வெளிச்சமும்
உனக்கு திசைகளை
சுழற்றி சுழற்றி வழிகாட்டும்
சமுதாயக்கலங்கரை விளக்கமும்
உன் கூடவே இருப்பதை
மறந்து
மரத்து
மறுத்து
எத்தனை காலம் தான்
உன்னை நீயே
ஏமாற்றிக்
கொண்டிருக்கப்போகிறாய்?
______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக