நீ என்ன நினைக்கிறாய்?
______________________________
நீ என்ன நினைக்கிறாய்?
யாருடைய கேள்வி இது?
வெறும்
வேதாளம் விக்கிரமாதித்தன்
கேள்விகளா இவை?
நூற்றாண்டுகள் பலப்பலவாய்
தொலைந்தே போய்விட்டன.
அறிவு நிரல் எனும் லாஜிக்
நட்டு வைத்த நாற்றா இது?
வானம் தந்த குரல்
மனித எச்சிலால் தீட்டுப்படுவதா
என்று
ஒரு சூன்யவாத ஆதிக்கம்
மனித சிந்தனையை
மடக்கி வீசி எறிகிறது..
வேதம் எனும் இந்த
மொட்டைச் சொல் அதிகாரம்
வைதிகம் ஆனது.
என்ன? ஏது? என்ற
கேள்விகளில் கருவுற்று
வளரும் வாழ்க்கை வழக்கம்
ஐதிகம் ஆனது.
ஹேது எனும் காரண இயல் தான்
ஐதிகம்.
ஏது என்ற தமிழ்க்கேள்வியே
அறிவின் வடிவத்தை
விரிவாக்கிச்சென்றது..செல்கிறது.
ஆனால்
எப்படி வைதிகமும் ஐதிகமும்
இங்கு கை கோர்த்துக்கொண்டிருக்கிறது
என்ற
கேள்விக்குள் கேள்வியாய்
மனிதனின் அறிவு வெப்பம்
சூடேற்றிக்கொண்டு தான் இருக்கிறது.
நம் சமுதாய முரண்களின்
முள்ளுக்காட்டில்
நம் பயணம்
ரத்தம் சிதறவிட்டுக்கொண்டே
சுவடுகளை பதிக்கிறது.
பாருங்கள்.
தேர்தல் என்று சொல்லிக்கொண்டு
அந்த கணினியின் பொத்தானை
அமுக்கி விட்டால் போதும்
எல்லாம் சீர் தான்.
எல்லாம் நேர் தான்.
எங்கும் தேனாறு பாலாறு தான்
என்கிற ஒரு கானல் நீர் ஆற்றில்
படகு செலுத்திக்கொண்டு தான்
இருக்கிறோம்.
நம்பினோர் கெடுவதில்லை
என்ற
அந்த நான்கு மறைக்
கீறல் விழுந்த பாட்டு எனும்
புதைகுழிக்குள்
இந்த ஈசல் சிறகுகள்
விழுந்து விழுந்து
கோடி கோடியாய்
மக்கிக்கிடக்கின்றன.
ஆம்.
நம்பினோர் கெடுதில்லை தான்.
மனிதம் எனும் அறிவின்
உந்து விசையை
அன்பின் மன வலிவை
மட்டும்
நம்பினோர் கெடுவதே இல்லை.
மற்ற இரைச்சல்களை
குப்பை எனத் தள்ளுவோம்.
_______________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக