சனி, 3 ஆகஸ்ட், 2024

மனிதக்குவியல்கள்

 



மனசாட்சி

எனும் அணுக்கதிரியக்கம்

ஆழ்துளை பூமியில்

கிடக்கிறது.

ஹிரோஷிமா நாகசாகி

என்ற நாச பிம்பங்கள்

மிரட்டிக்கொண்டிருந்தாலும்

அது 

பயப்படுவதாயில்லை.

கட்டைவண்டி யுகத்துக்காரர்கள்

ஆனாலும் சரி.

செவ்வாய் மண்டலத்தை

பொட்டலம் போட்டுக்

கொண்டிருப்பவர்களானாலும் சரி.

மனிதம் நேசி

எனும் குரல் கேளாத‌

மட்டைகளாகத்தான் 

இங்கே உலவுகிறார்கள்.

செயற்கையாய்

உயிரை உருவாக்குவோம்.

செயற்கையாய்

அறிவையும்

அறிவு விளையும் வயல்களான‌

மூளைப்பாத்திகளையும்

உருவாக்குவோம்.

அப்போதும் 

தனி மனிதனுக்கு உணவில்லையெனில்

என்ற சீற்றமெல்லாம்

எங்களுக்கு இல்லை.

டேட்டா சையன்ஸ் என்ற‌

சாவி எங்களிடமே.

ஆயிரம் அண்டங்களிலும்

"லாபம்" எனும் தோட்டங்களை

அதுவும் லேசர் துப்பாக்கி உமிழும்

மரண வேலிகள் கொண்டு

பயிராக்குவோம்.

மனித எலும்புகளை

உரமாக்க வேண்டுமானால்

கோடி மக்களை உருவாக்கி உருவாகி

அழிப்போம்.

அவர்களின் உறுப்புகளைக் கொண்டு

வியாபாரம் செய்யும் விஞ்ஞானத்துக்கு கூட‌

செயற்கை மூளையை செயல் படுத்தும்

க்ரிப்டோ கோடுகள் எல்லாம்

கார்ப்பரேட் மயம் ஆக்கி

பங்கு மூல தன சந்தைக்கே

இந்த "பிரபஞ்சங்களை"

பந்தி விரிப்போம்.

இப்போதும் அடியில்

ஈனக்குரலில்

அந்த மனசாட்சியின்

ரேடியம் கசியும் ஒலிப்புகள்

கேட்டுக்கொண்டிருந்தால்

கேட்டுக்கொண்டிருக்கட்டுமே...

......

என்னது?

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியின்

அபாயக்குரலா?

அந்த நிலவு அளவு விண்கல்

நம் பூமியோடு

இன்னும் சில நிமிடங்களில்

மோதப்போகிறதா?

வெர்ச்சுவல் ரியாலிடி பிம்பங்களில்

கோடி கோடியாய்

பிணங்களாய்

மனிதக்குவியல்கள்...?!!!


________________________________________________

செங்கீரன்.

 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக