செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

ஈரோடு தமிழன்பன் கவிதை /14.08.2024

 


ஈரோடு தமிழன்பன் கவிதை /14.08.2024

________________________________________________-



நிழல்
இயக்கம் உடையதா?இல்லையா?
ஒளி
நிழலுக்கு
உறவுடையதா?இல்லையா?
நிழலைப் பொய்யெனச் சொன்னால்
மெய் என்ன ஆகும்?
ஒளியிலிருந்துதான்
நிழல் பிறக்கிறதெனில்
நிழலுக்கெனப்
பிறப்போ இறப்போ இல்லையா?
இருளின் தயவில்தான்
நட்சத்திரங்கள் ஒளிவீசுகின்றன
இரவை
வணங்கிவிட்டுத்தான்
சூரியன்
பகலைத் தோளில் சுமந்து
உலகுக்கு வருகிறான்.
இரவைக்கூடப்
பகலின் நிழல் என்று நீங்கள்
எப்படிச்சொல்லமுடியும்?
உண்மை
பெற்றெடுத்த சேய்களா நிழல்கள்
மூலத்தைத் தேடும்
இந்த நிழல்பிரதியை
மூலமே அச்சிட நேர்ந்தது எப்படி?
சார்ந்தே இருக்கும்
நிழல் வாழ்க்கைவரலாற்றை
ஒளியின் தேசம்
விலகியிருந்து வரவேற்று
ஒருநாளேனும் நிழலைத்
தன்அரியணையில்
அமரவைக்குமா?
சுயம்விலகி
வாழும் அனுபவம் நிழலுக்குச்
கிடைத்தது போல்
தன்னை இழக்கச் சம்மதம் இல்லா
நிசத்துக்கு என்ன
என்னகிடைக்கும்? எப்படிக்கிடைக்கும்?
புலனடக்கம் இல்லாதவை
மலர்கள்
மணம் வீசும்; வண்ணச் சிலிர்ப்பில்
தலைநிமிர்த்தும்.
அவை
பாசமும்பற்றும் நீங்கும்போது
பூமியைத் தொடும்;
வண்ணம் துறந்தும்
நறுமணமூச்சின் தொடர்
வாழ்வை விலகியும்
நிழல்களின் கைகளைப்
பற்றியவாறு
இன்மையில் கரையும்.
கண்ணாடி
முன்நின்று பாருங்கள்
உங்கள் நிழல்கள் நிசமில்லை!
காரணம்
நீங்கள் நிசமில்லை!

நிழலும்நிசமும்--தலைப்பு
14-08-2024 காலை 7-10

______________________________________________________________________



அன்பான 
ஈரோடு தமிழன்பன்
அவர்களே!
கவிதைகளின் 
பஃறுளி ஆறே!
உங்கள் சொற்கள் தெறித்த‌
சாரல் ஈரம் இதோ
என் வரிகளில்...


நிரந்தரமான நிழல் 
நிஜமாகி விடுகிறது.
நிழலின் கருப்பைக்குள் இருந்த 
நிஜம்
மண்ணுக்குள்
எலும்புக்குவியலாய் கிடந்து
வரலாற்றுப்பாடம்
நடத்திக்கொண்டிருக்கிறது.
மந்திரம் சொல்லி
அந்த மாங்காய்ச்செடியை
ஆவியாக்கிய பின்
அந்த நிழல் கோரைப்பல் 
காட்டுகிறது.
அறியாமையை பூதம் காட்டி
அறிவு புதைக்கப்படுகிறது.
இந்த பிலாக்கணங்களையா
பொக்கிஷம் என்று
குங்குமம் வைத்து நாம்
கொண்டாடிக்
கொண்டிருக்கவேண்டும்?
நிஜம் என்பது
ரசம் பூசப்படாத கண்ணாடி.
நம் கண்ணீரும் கனவும்
பிம்பம் காட்ட முயலும்போதும்
வெறுமையில் ஊடுருவி மூளியாகிவிடும்.
நிழல் என்பது
கண்ணாடியே இல்லாமல்
நம் மனத்தின் பரப்பின் மீதே
ரசாபாசங்களை
ரங்கோலிகளாய் காட்டும்.
வாழ்க்கையின் கடைசிச்சுவரில் 
நாம் முட்டிக்கொள்ளும்போதே
தெரியவில்லை.
அது 
நமக்கு 
இரவா? இறவா?
என்று.
நம் செல்களின் முற்றுப்புள்ளி
மேல்
இவர்கள் பிண்டம் வைத்து
அம்புலிமாமாக்கதைகள்
ஆயிரம்
சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள்.
மனிதம் எனும் நிஜம்
எல்லா அண்டங்களுக்கும்
அறிவின் அடுப்பு மூட்டி
சமைக்கும் ஊழிகளின் நெருப்பு அது.

___________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக