விரைந்து வாருங்கள்.
_____________________________________
நொறுங்கிக்கிடக்கிறது
மணி மண்டபம்.
நூற்றாண்டுகளை சிதிலங்களாக்கி
ராட்சத வௌவ்வால்களின்
சிறகடிப்புகளும்
நூலாம்படை வலைகளின்
ஹைபர்போலிக் ஜியாமெட்ரியில்
பாழடைந்த பிக்காஸோவின்
கோட்டுச்சித்திரங்களும்
எதைச்சொல்கின்றன?
எதோ ஒரு
ஓநாயின் ஊளைகளையா?
கலைடோஸ்கோப் திருப்பு வண்ணங்களின்
எண்ணக் குழம்பியங்களையா?
கீட்ஸ்
எழுதினானே "கிரேக்கக்கோப்பை" என்று
ஒரு கவிதை...
அதன் சுடுகாட்டு மூச்சு வெப்பங்களில்
காதல் ரோஜாக்களின்
பேய் இதழ்கள் பிய்த்துக்கொள்ளும்
கூந்தல் கீற்றுகள் போன்ற
சிலுப்பல்களையா?
எதையாவது
ரத்தக்கடலின் சுநாமி அலைச்சுருட்டல்கள் போல்
நெய் ஓவியம் தீட்டிக் காட்டும்
திகில் உரிப்புகளையா?
எதை
கருப்பிடிப்பது?
எதை
உருப்பிடிப்பது?
யுகங்கள் கோரைப்பல் பிளப்புகளில்
புதிய விடியலை
உமிழ்கிறேன் உமிழ்கிறேன் என்று
பிலிம் காட்டுவதையா?
சித்தாந்தங்கள் மலடு தட்டிப்போயின.
அதனால்
மூச்சுப்பிரளயங்களில் மூண்டெழுந்து
முகம் காட்டி வரும் கப்பல்கள்
எங்கோ அங்கு
தரை தட்டி நின்று கொண்டிருக்கின்றன.
ஓ! எங்கள் பளிங்குக்கவிதைகளாய்
அங்கே பளபளப்பாய்
எழுதிக்காட்டிக்கொண்டிருக்கிற
நம்பிக்கைகளே!
வாருங்கள்...வாருங்கள்
விரைந்து வாருங்கள்.
____________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக