செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

உலகம் பிறந்தது.

 உலகம் பிறந்தது

_________________________________

ருத்ரா



உலகம் பிறந்தது எனக்காக‌

என்று தான்

இந்த நரிகளும் ஓநாய்களும்

பாடிக்கொண்டிருக்கின்றன.

இவற்றின் மீது

எங்கிருந்தோ அம்புகள் வந்து

பாயக்காத்திருக்குமோ?

நமக்காக‌

என்று 

ஒரு முணு முணுப்பு கூட இல்லை.

அப்படி எரிந்த தீ தான்

இன்னும் வெளிச்ச மழை

பொழிந்து கொண்டே இருக்கிறது.

எனக்கு என்றால்

எல்லாவற்றையும் எனதாக்கிக்கொள்வேன்.

செத்துப்போய் கிடக்கும்

கல்லிலிருந்து கூட நார் உரிப்பேன்.

அந்த சூரியனின்

ஒளிப்பிழம்பைக்கூட‌

இதிலிருந்து தின்று கொண்டிருப்பேன்.

வானத்தில் பறக்கமுடியாதா

என்ற ஏக்கத்தை வன்மத்தோடு

துரத்திப்பிடிப்பேன்.

கடல்கள் எனக்கு பிரமிப்பு இல்லை.

அதன் அடிவயிற்று மஞ்சாச்சோறெல்லாம் கூட‌

எனக்கே எனக்குத் தான்.

அறிவு எனும் 

தினவு என்னையே

சொரிந்து சொரிந்து

தின்னத்தொடங்கியது.

கண்ணுக்குத்தெரியாத 

காற்றுச்சதையிலிருந்து

ஒரு பூதத்தின் காதைப்பிடித்து திருகி

வெளியில் எடுத்தேன்.

மின் ஆற்றல் ...ஆம்

அது தான்

இந்த உலகத்தை உருட்டிப்பிசைந்து

என் கையில் கொடுத்தது.

அதே மூளையின் மூலையில்

ஒரு புழு குடைந்தது.

அதன் நமைச்சல் தாங்கவில்லை.

அதை எப்படி அடையாளப்படுத்துவது.

கடவுள் என்று அது

தீர்மானம் ஆகும் வரை

கையில் கிடைத்த கல்லை

அங்கு வைத்தேன்.

இப்போதும் சொல்கிறேன்.

உலகம் பிறந்தது எனக்காக.

ஆனால்

அந்த "எனக்காக" என்பது

குட்டி போட்டு குட்டி போட்டு

கூட்டம் சேர்த்தது கோடி கோடியாய்.

எனக்காக என்பதனுள்

எல்லாமே கூடு கட்டிக்கொண்டது.

கண்ணுக்குத் தெரியாத‌

ஆர் என் ஏ டி என் ஏ எனும்

உயிர்ச்சங்கிலி 

என்னுள் எல்லாம் ஆனது.

என் தும்மல்

ஒரு பூகம்பம்.

என் விரல் சொடுக்கில்

கோடி கோடி ஒளியாண்டுகளை

பம்பரக்கயிறு போல் 

சுழற்றி வீசுவேன்.

கோடி கோடி அண்டங்கள்

என் காலைக்காப்பிக்கிண்ணத்தில்

நுரைத்து நுரைத்து 

குமிழிகள் பூக்கும்.

அடையாளம் வைத்தேனே

அந்தக்கல்...

ஏன்

எப்படி 

இன்னும் அந்த சாக்கடை ஈக்களால்

மொய்த்துக்கொண்டிருக்கிறது.

நாம் என்ற விரிவில்

நான் ஒன்றும் அழிந்து விடவில்லை.

என் உட்பொருள்

காலக்கொதிப்பின்

உலைக்களம்.

எல்லோரும் வாழ்வேண்டும் என்ற‌

மங்கல் ஒளி இன்னும்

மண்ணுக்குள் மக்கியே கிடக்கிறது.

அதை எரிமலை என்று

அதன் மீது நாற்காலி போட்டுக்கொண்டு

உட்காரவும் 

என்னால் முடியும்.

நாய்ச்சங்கிலி போட்டு

அந்த எரிமலையை ஒரு பப்பியாய்

கட்டி வைத்திருக்கவும் 

என்னால் முடியும்.

கோடி கோடி மக்களுமாய்

நான் 

நிழல் காட்டுவேன்.


அந்த பெரிய்ய்ய நான்

அதுவாகவே பிய்த்துக்கொண்டு 

வரட்டும்.

அது வரை இந்த‌

சாக்கடை ஈக்கள் 

மொய்த்துக்கொண்டு தான் இருக்கும்.

........................................

உள்ளிருந்து 

இது யார் குரல்?

கடவுளா? மனிதனா?

ஒன்று பொய்.

இன்னொன்று பொய் இல்லை.

மனிதனை வெட்டிப்பிளக்கும்

கடவுளின் கோடரியும்

கடவுளை சுட்டுப்பொசுக்கும்

மனிதனின் துப்பாக்கிக்குண்டும்

ஒரே இடுப்பில் தான்

செருகப்பட்டிருக்கிறது.

என்ன இது?

இன்னுமா தெளியவில்லை.

குழம்பி குழம்பித் 

தெளிவதே அறிவு.




_________________________________________________






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக