கத கேளு..கத கேளு
____________________________________
கத கேளு..கத கேளு
நண்பனே கத கேளு.
நேற்று நம் சுதந்திரத் திருநாளை
மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.
குட்டி குட்டித்தீவுகளாய்
சாதி சமய வரம்புகள்
அமைத்துக்கொண்டு
கிடந்தோம்.
ஆம்
வாழ்ந்தோம் என்று சொல்லும்
அருகதையே கிடைக்கவில்லை.
அந்தந்த இடத்து ராஜாக்கள்
குடிமக்களின் உழைப்பைக்குவித்து
கோபுரமாக்கி
அதன் மேல் உட்கார்ந்து கொண்டு
கோலோச்சினார்கள்.
மன்னனும் இறைவன் ஒன்று
என்றே
மிக உயரமாக பார்க்கப்பட்டான்.
மேலை நாடுகளில்
அறிவியல் புரட்சி நடந்தது.
சமுதாயப் புரட்சி நடந்தது.
தொழிற் புரட்சி நடந்தது.
நிறவெறிக்கொடுமைகள் இருந்தன.
நமக்கு
ஒன்றே தான் இருந்தது.
அது சாதி வெறி.
மதத்தில் ஊறிய சாதி வெறி.
இந்த சேற்றில் எல்லாம்
அமிழ்ந்தே கிடந்தன.
சாதி அடுக்குகளில்
மேலிருந்து கீழ் வரை
அமுக்கும் ஆதிக்க வெறி மட்டுமே
இங்கு சாஸ்திரம் ஆனது.
விஞ்ஞானம் என்ற பேச்சுக்கே
இடமில்லை.
அதனால்
இருட்டு தான் நமக்கு கடவுள்.
எண்ணெய் தீபங்களில்
அந்த இருட்டைக்கரைக்க முயன்று
சூடம் காட்டிக்கொண்டிருந்தோம்.
அடிப்படையான
மனிதப்பண்பு அற்றுப்போன
தேசமாகத்தான் நாம்
வாழும் இடம் இருந்தது.
நூற்றுக்கு மூன்று பேர்கள்
மீதம் இருந்த
தொண்ணூற்றேழு பேர்களுக்கு
கடிவாளம் மாட்டி
கைவிலங்குகள் மாட்டாத குறையாய்
வைத்துக்கொண்டு
ஆதிக்கம் செலுத்தினார்களே
அது எப்படி?
அறிவு எனும்
வெளிச்சமே இல்லாத இருட்டுக்காட்டில்
மந்திரக்கூச்சல்களில்
அச்சமூட்டி
அடக்கி வைத்திருந்தார்கள்.
மண்ணின் மைந்தர்கள்
ஊமைகள் ஆனார்கள்.
வந்தேறிகளின்
கூச்சல்களே
சட்ட திட்டங்கள் ஆயின.
இந்திய என்ற சொல்லே
சிந்திய என்று சிந்து ஆற்றின்
ஊற்று ஒலியில் பிறந்தது தான்.
வந்தேறிகளை
விருந்தாளிகளாய் போற்றினார்கள்.
சிந்து ஆற்றின் அந்த
சீர்மிகுந்த தமிழர்களின்
விருந்தோம்பல் விழுமியத்தால்
அந்த தமிழர்களே
வீழ்த்தப்பட்டார்கள்.
வந்தவர்கள் சூழ்ச்சியில்
இருந்தவர்கள்
இடம் மாறி தடம் அழிந்து
இற்றுப்போனார்கள்.
ஆனாலும் இன்றும் நாமே
அந்த தமிழர்கள்.
கேட்கிறதா?
மந்திர ஒலிகள்.
அந்த
நச்சு ஓசைகளே நம்மையெல்லாம்.
நசுக்கிய ஓசைகள்.
சாதிகளின் அடுக்குகளில்
நம்மை பாத்தி கட்டி
நம்மைக்கொண்டே இந்த
மண்ணை உழுது அதில்
உண்டு கொழுத்து
நம்மை நலிந்து நைந்து போகச்செய்து
கந்தல்கள் ஆக்கி விட்டார்கள்.
இந்த கந்தல்கள்
கூளங்களாய் சிதறிக்கிடப்பதால்
நம் விடியல் சேவல்கள்
இன்னும் கூவவே இல்லை.
சாதி மதப் பேய்கள் ஆட்டுவிக்கும்
இந்த பொய்மைகளின்
கொடும்பாவிகள் கொளுத்தப்படாத வரை
இந்த கிழக்கின் சூரியன்கள் எல்லாம்
வெற்றும் மின் மினிப்பூச்சிகளே.
ஏமாற்றும் ஸ்லோகங்களின் மூட்டங்கள்
மூடிக்கிடப்பதால்
நமக்கு வழி காட்டும்
பாதையும் இல்லை.
ப்யணமும் இல்லை.
மைல் கல்லும் இல்லை.
மன ஊக்கமும் இல்லை.
இதிலிருந்து நமக்கு
என்று
சுதந்திரம் கிடைக்குமோ
அதுவே
நம் உண்மை சுதந்திரம்.
______________________________________
தமிழ்ச்செங்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக