ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

"எல்லாம் இன்பமயம்"..

 "நந்தவனம்"

_________________________________


வலியிலிருந்து

வலி வரைக்கும்

என்ன இருக்கிறது?

வலியே தான்.

சாக்கரின் தடவிக்கொண்டு.

வாழ்க்கை 

என்று பெயர்

 சொல்லிக்கொண்டு.

..............

கேட்டால் 

அந்தக் காலத்து ரிஷிகள்

அதை பிரம்மம் என்பார்கள்.

வ‌லியைப்போயா 

கடவுள் என்று 

பூஜை செய்வது?

அது பிரம்மானந்தம்!

அது என்ன வென்று

எவருக்குமே தெரியாது.

அது என்ன வாகத்தான் 

இருக்கும்?

என்று மண்டைக்குடைச்சல் வரும்.

அதற்கு 

சுழற்றி சுழற்றி மந்திரங்கள்

சொல்ல வேண்டியிருக்கும்.

இந்த வலி என்ன வலி என்று

இனம் புரியாத ஒரு வலியாகி

நம்மை முறுக்கிக்கொண்டே இருக்கும்.

இந்த வலி என்பது....

போதும்டா சாமி.

யார் சொன்னது இதை வலி என்று?

திவ்யம்...திவ்யம்

பரம சுகமே இது..

......

அப்புறம் 

எல்லா வலிகளும் பாடுகின்றன..

"எல்லாம் இன்பமயம்"

..................

அம்பதுகளில்

"எல்லாம் இன்பமயம்"

என்ற 

அந்த சினிமாப்பாடல்

ஒலி பெருக்கிக்குழாய் வழியே

ஒழுகிக்கொண்டிருக்கும்.

கல்யாணவீடுகளில்

முதல் நாள் மாலையே

பந்தலுக்கு 

ஓலைக்கீற்றுகள் வந்து

அதனோடு வாழைமரங்களும்

தோரணம் அமைக்கும்

பொழுதே இந்த 

இனிய பாடல் தான்

எங்கள் கல்லிடைக்குறிச்சி

ஊர் வாய்க்காலின் 

பளிங்குத் தண்ணீர்

பரப்பெல்லாம் எதிரொலிக்கும்

வாழ்க்கை என்ற அந்த

இசைத்தட்டு

குப்புறத் திருப்பிப் போட்டு

"எல்லாம் துன்ப மயம்"

என்று கூட பாடலாம்

எனும்

"பின் தொடர்வை"

அறியாத 

பிஞ்சுகளின் நந்தவனம் அது.

வேண்டாம்...அதைப்

பிய்த்துப் பார்க்க வேண்டாம்.

‐‐------------------------------------------

சொற்கீரன்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக