நான் யார் நான் யார்
என்ற கேள்வியை
உள்ளுக்குள்ளேயே
தூண்டில் வீசிக்கொண்டிருந்தவர்கள்
கடைசியில்
பிடிபட்டுப்போனார்கள்.
ஆசைகளின் ஆசைகளுக்கெல்லாம் ஆன
ஒரு பேராசையில்
சிக்கிப்போனார்கள்.
நானே கடவுள் என்ற
பெருஞ்சேற்றில் சிக்கிக்கொண்டார்கள்.
கடவுள்கள் எல்லாம்
அவர்கள் காலடியில்
வீழ்ந்து விடவேண்டும்
என்ற வெறி கொண்டார்கள்.
மக்கள் எல்லாம் மந்தைகூட்டங்களாய்
அவர்களை மொய்த்தார்கள்.
இல்லாத சக்திகள் எல்லாம்
அவர்களின் தாடிகளுக்குள் மீசைகளுக்குள்
இருப்பதாய்
தோற்றங்கள் உருவாக்கினார்கள்.
அறிவின் உள்ளாற்றல் தொலந்து போனவர்களே
மக்களில் பெரும்பான்மையாக
இருந்ததால்
இந்த உலகம் ஒரு
முட்டாள்களின் பெருங்கூடாரமாயிற்று.
இந்த நிழலில்
மனிதனுக்கு மனிதன்
மனிதனாகவே வாழவேண்டும் என்ற
மலர்ச்சி ஒளி மங்கியே போனது.
சில மனிதர்கள்
மற்ற எல்லா மனிதர்கள் மீதும்
ஆதிக்கம் செலுத்தும் வெறியே
எங்கும் மேலோங்கி இருந்தது.
சிறு பான்மையாய் இருந்த
மனிதர்களின் அறிவு கூட
அந்த பெரும்பான்மைக்கூட்டத்தை
அடக்கி ஆளும் ஆயுதம் ஆயிற்று.
சிந்தனை பரவல் இல்லை.
அறிவின் பரவல் இல்லை.
அந்த ஆதிக்கம் மட்டுமே
மிகப்பிரம்மாண்டமான
டைனொசார் மிருகமாய்
எங்கும் உறுமிக்கொண்டிருக்கிறது.
இறந்து போன இறைவம்
அழுகிப்போன மனிதம்
இவற்றின் மிச்ச சொச்சமே
இங்கு எல்லாமாய் சிதறிக்கிடக்கின்றன.
இது மொத்தமான
தறி கெட்ட உளவியல் வெள்ளம்.
டோட்டல் சைக்காலஜிகல் அனார்க்கி.
உயிர்கள் எல்லாம்
ஒழுகிப்போன இந்த
உயிரற்ற வடிவக்கூடுகளின்
குவியல்களுக்கு அடியில் நாம்
தேட வேண்டும்
அந்த முதல்
வாழ்க்கையின் துடிப்பை..கனவை..
வானமே களவு போன பின்
விடியல் கவிதை எழுத
உட்கார்ந்தவனின் காகிதமும் பேனாவுமாக...
இந்த பாலைவனம் இன்னும்
இறந்தே கிடக்கிறது.
திறந்தே கிடக்கிறது.
விரிந்தே கிடக்கிறது.
__________________________________இபிஎஸ்
பின்குறிப்பு
என்ன சொல்லவருகிறீர்கள்?
எதுவும் சொல்ல வரவில்லை.
எதுவும் சொல்ல முடியாத ஒரு
நிலையைத்தான்
சொல்ல முயன்றிருக்கிறேன்.
ஒரு நூல் கண்டு
அடி முடி காண முடியாமல்
இருக்கிறது.
கையில் கிடைத்ததை
வெட்டி பிரித்து
நூல் விட்டதே இக்கவிதை.
மோசமான முரண்பாடுகளின்
முடிச்சு மூட்டையை
வைத்துக்கொண்டு
இதை விட மோசமாக
எழுத முடியாது என்று
எழுதியதே இது.
இந்த இது என்னை
உறுத்திக்கொண்டு தான்
இருக்கிறது.
_________________________________
இபிஎஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக