Sasikumar Samikan
WITH THANKS FOR THE LINK.
பாலாமடை
____________________________________
சொற்கீரன்.
நினைவேற்றும் திறம்
இல்லாத பிஞ்சு வயதுகளில்
என் அக்கா அத்தான்
வாழ்ந்த அந்த ஊருக்குச்சென்ற
ஞாபகம்
மெல்லிய நூலாய் படர்ந்தது.
இது அந்த ஊரின்
பெரிய தலைவரின் "பங்களா"வாக
இருக்கும்
என்று நினைக்கிறேன்.
அந்த ஊரில் ஒரு சின்னக்குளம்
தாண்டிச்சென்று
எதோ ஒரு அரவைமில்லுக்கு
சென்றதும் நிழலாடுகிறது.
காலம்
மனிதனை செப்பு வைத்து
விளையாடும் அந்த
விளையாட்டில்
நான் ஏதாவது சிறு பாத்திரமாகத்தான்
இருந்திருப்பேன்.
பொய்யாய் அடுப்பு மூட்டி
பொய்யாய் பசித்து
பொய்யாய் ருசித்து
நாக்கில் சப்பு கொட்டி
அந்த "காலம்" எனும் சிறுமியின்
மின்னல் வகிடுகளில்
சுடர்ந்த கனவு போன்றது
அந்தப்படலம்.
என் நினைவுபடுத்தலுக்குள் கூட
வரமுடியாத
அந்த மழலைப்பூட்டின்
சாவியை
இப்போதும் இன்னும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக