கிருஷ்ண ஜெயந்தி
_____________________________
புல்லாங்குழலும் மயில் இறகு கீரீடமும்
இவன் அடையாளம்.
விளையாட்டுப்பிள்ளை பருவத்தில்
ஆணும் பெண்ணுமாய்
களித்து விளையாடி
பல வீரதீரச்செயல்கள் மூலம்
எல்லா உளளங்களையும்
திருடியவன் தான்.
உரிகளில் வெண்ணையையும்
திருடியவன் தான்.
இவன் மாமன் கம்சனைக்
கொல்வதற்காக
ஒரு கொடூரமான அட்டைப்படத்தை
மாமனுக்கு மாட்டி வைத்து
கிருஷ்ணாவதாரம் ஒன்றை
நிகழ்த்தினான்.
சொந்த தங்கையை சிறையில்
வாட்டி
அவள் பெற்றெடுத்த
குழந்தைகளையெல்லாம்
கொன்றொழிக்கவேண்டும்
என்று
கம்சனுக்கு அரிதாரங்கள் அப்பினார்கள்.
கடவுள் நினைத்தால்
தீமையை படைக்காமலேயே
விட்டிருக்கலாம்.
அப்புறம்
இந்த வதை மற்றும் மோட்சப்படலங்கள்
எல்லாமே மிச்சம் தானே.
சரி..
அப்புறம் குருட்சேத்திரத்தில்
தர்மம் என்று சொல்லப்படுகிற
சட்டம் காக்கப்பட அது
ஏழெட்டு விதமாய் வளைக்கப்பட்டு
நெளிக்கப்பட்டு அதன் கழுத்தும்
நெறிக்கப்படலாம் என்றும்
அதர்மம் ஹதம் செய்யப்பட
இப்படியெல்லாம்
கழுத்து நரம்பு புடைக்க
பாஞ்ச ஜன்யம் ஊதி முழங்கலாம் என்றும்
ஒரு மகாபாரதத்தில் போய் அதற்கு
மூக்கை நீட்டிக்கொள்ளலாம்
என்றும்
அப்புறம்
இதே சாக்கு என்று
ரத்தவெள்ளம் பெருக்கெடுத்து ஓடச்செய்யலாம்
என்றும்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
பாட்டும் கொட்டும்
முழக்கம் செய்யவா இந்த
கிருஷ்ண ஜனனம்.
அதர்மம் என்று ஒரு எதிர்க்குதிரையை
நிறுத்துவானேன்.
அப்புறம் அதை சக்கரம் கொண்டு
பிளப்பானேன்.
இது மட்டுமா?
அந்த மோசமான வர்ணங்களைப்பூசி
மனிதம் எனும் தூய ஒளியை
சாக்கடைக்குள் கொண்டுபோய்
அமுக்குவானேன்
அப்புறம்
சம்பவாமி யுகே யுகே என்று
அந்த "புளுகுணித்"திரையை
விலக்கிக்கொண்டு
முகம் காட்டுவானேன்.
சரி.
என்னங்காணும்
ஏதேதோ பிதத்திண்டு இருக்கீர்.
வடை லட்டு சீடை முறுக்கு
என்று
ஒரு பிடி பிடிச்சோமா
வைகுண்ட வாசல் கதவைப்போய்
மொய்த்தோமா
என்று இருக்காமல்...
இத்துடன்
"கருப்பனின்"கீதை
முற்றும்.
_________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக