சனி, 16 மார்ச், 2019

சொட்டுகள்

சொட்டுகள்
==================================ருத்ரா

மழை நின்றபின்னும்
அந்த ஓலைக்கூரையின்
விளிம்புகள்
நீரின் சொட்டுகளை
பிரசவித்தன.
ஒவ்வொன்றும்
ஏழுவர்ண ரத்தத்தின்
சொட்டுகளாய்
சூரியனின் சல்லடையில்
அரிக்கப்பட்டு
விழுந்து கொண்டிருந்ததை
பார்த்துக்கொண்டே இருந்தேன்.
பிரெஞ்சு புரட்சியின்
கிலட்டின் தலைகளா அவை?
யோகிகள் உருட்டும்
பளிங்கின் ஜபமாலைகளா?
விஞ்ஞானிகளின்
குவாண்டம் பாக்கெட்டுகளா?
காதலன் காதலி முகம் நோக்க‌
காதலி தலை கவிழ்க்க‌
அவிழாத நேரத்தின்
அரும்பு முனைகளா அவை?
பேசாமல்
மௌனத்தை அசைபோட்ட‌
வெறும் கேள்விகள்
அங்கே சொட்டுகளாய்
விடைகளை எதிர்பாராமல்
விழும்
"லாவா"ப்பிஞ்சுகளின் மூச்சுகளாய்
அங்கே
சொட்டுகள்.
சொட்டுகள்.
.........
............
சொட்டுகள்!

================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக