நிழல்களின் நிறம்.
====================================ருத்ரா
பச்சை இலைகள் வடிகட்டி
ஊற்றிய நிழல் மழையில்
நனைந்து
உட்கார்ந்தேன்.
மனித உயிர்களின் வேர்கள்
இந்த மரங்களை
ஒட்டியே உள்ளன.
இதில் மறைந்திருந்த முரண்பாடுகள்
திடீரென்று
"அனக்கோண்டா"வாய்
வாய் பிளந்து நின்றன.
இந்த பச்சை உலகங்களை
வெறும் பச்சை நோட்டுக்காக
சிதைக்க
கோடரி தூக்கும்
அந்த பச்சைகாட்டுமிராண்டித்தனத்திடம்
ஏன்..இப்படி?...
என்ற கேள்வியை வீசினால்
கோடரியாய்
இந்த சொற்களை
நம் மீது அது வீசுகிறது.
"உனக்கு வெயிலைத்
தாங்க முடியவில்லை.
எனக்கு பசியைத்
தாங்க முடியவில்லை."
அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்.
காட்டிலே
அங்கொரு பொந்திடை வைத்தேன்.
வெந்து தணிந்தது காடு!
தீம் திரி கிட..தீம் திரி கிட..
பாரதி தாளமிட்டான்!
வறுமையின் நிறம் சிவப்பு தான்!
இந்த பச்சை நிழல்கள் கூட
சிவப்பு மத்தாப்பை
கொளுத்துகின்றனவே.
ஆம்.
இப்போது இந்த நிழல்கள் கூட
எரிகின்றன!
================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக