வியாழன், 21 மார்ச், 2019

குடம்

குடம்
===============================================ருத்ரா

என் வயது எனக்கு மறந்து போனது.
பள்ளிக்கூட வயதா?
காதல் வயதா?
கல்யாணம் குடும்பம் குட்டிகளோடு
நெற்றி ரேகைகளில்
எழுதிக்காட்டும் வயதா?
வயது என்னை விரட்டிக்கொண்டு வந்தது.
நானும்
மைல்கற்களின் இந்த முட்டுச்சந்தில்
மூச்சு விட்டு மூச்சு வாங்கி நிற்கிறேன்.
அது ஓடட்டும்
என் கண்களில் படாமல் என்று
ஒரு குப்பைத்தொட்டியில்
ஒளிந்து கொண்டேன்.
வயது எங்கோ ஓடிவிட்டது.
எதையோ ஏமாற்றிய களிப்பில்
ஆனந்தவிகடன் குமுதம் பக்கங்களில்
பளிச்சென்று தெரிந்த‌
வரிகளைப் படித்துக் கிளு கிளுத்தேன்.
எதற்கு
பகவத் கீதையும்
யோகவாரிஷ்டமும்
பிரம்ம சூத்திரமும்?
வரட்டிகளுக்கு காத்திருந்து
கருடபுராணத்தின்
கிருமி போஜனமும்
கும்பி பாகமும் பற்றி
எதற்கு மானசீகமாய்
அந்த ரம்பங்களில்
மண்டை அறுபட்டு துடிக்கவேன்டும்?
பாசிடிவ் என்றும்
நம்பிக்கை என்றும்
சில தலப்பா கட்டு சாமியார்களே
குட்டிக்கதைகள் எழுதினார்கள்.
சிவனைப்போல ஆடச்சொன்னார்கள்.
வயதுகள் கழன்றுபோவது
உங்கள்
உள்ளே ஊறும் மின்னல்குழம்பிலிருந்து
நூல் நூற்றுக்கொள்ளத்தான்.
பவ தாரிணியை காத‌லியுங்கள்
லோகமாதா தான்.
சஞ்சலம் வேண்டாம் என்றார்கள்.
சும்மா வில்லை வளை
என்று
அர்ஜுனனுக்கு சொன்ன மாதிரி
சொன்னார்கள்.
சௌந்தர்ய லகிரியில் அந்த‌
அழகிய கழுத்தின் மூன்று ரேகைகளை
சித்திரம் தீட்டி காட்டினார்கள்.
நானும் அந்த பெரிய சிவனின்
மிகப்பெரிய கழுத்தின் சிலைக்கு
ஊர்ந்தேன்.
அப்புறம் தடாலென்று மயங்கி விழுந்தேன்.
கண்ணைத்திறக்கவில்லை.
படுக்கையில் தான்.
விஷ்ணுவின் அவதாரம் எனக்குள்
காய்ச்சலை எப்போதும் 114 டிகிரி காட்டியது.
டைக்னாசிஸ்..பன்றிக்காய்ச்சல்.
இது எப்போது?
அந்த குப்பைத்தொட்டியிலா?
இல்லை கழுத்து நரம்பு புடைத்து ஆடி
ஒரு புழுதிக்குள் விழுந்ததிலா?
சுற்றிவரும்
அந்தக் குடத்தில்
இப்போது ஒன்பது ஓட்டைகளில்
நீர்ப்பீய்ச்சல்களாய்
ஒழுகினேன்.

==============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக