வெள்ளி, 1 மார்ச், 2019

கண்ணாடி பிம்பத்தோடு ஒரு யுத்தம்


கண்ணாடி பிம்பத்தோடு ஒரு யுத்தம்
===========================================ருத்ரா

பக பகவென்று
இன்னும் சிரித்தது கண்ணாடி.
எட்டு கோணல் என்றால்
உனக்கு அவ்வளவு இளக்காரமா?

அஷ்டவக்கிரர் அப்படி ஒரு
எட்டு கோணல் ரிஷி.
அவர் அஷ்டவக்கிர கீதையில்
ஜனகருக்கு
உபதேசம் செய்கிறார்.

அதில் எனக்கு பிடித்த வரிகள்
இவை.

"இந்த பஞ்சபூதங்களும்
ஏன் இந்த பிரபஞ்சவெளியும் கூட‌
உன்னைச் செய்ய வில்லை.
உன் உள்ளுணர்வு
எல்லாவற்றிலிருந்தும் வெளியில்
நிற்கிறது
அந்த உள்ளுர்ணவை வைத்து
இந்த பிரபஞ்ச பூதங்களை
வேடிக்கை பார்.
மோட்சத்தின் உட்பொருள் இது."...(1.3)

"நீ பிராமணன் இல்லை.
அல்லது வேறு எந்த சாதியும்
உனக்கு இல்லை.
சாதாரண கண்கள் மேயும் பொருள்களால்
நீ படைக்கப்படவில்லை.
எல்லாம் கழன்ற உன் உள்ளுணர்வின்
பார்வையே
அப்படி நீ வேடிக்கை பார்ப்பதே
உன் விடுதலை..ஆனந்தம்.."  (1.5)

பின்னால் பூசிய ரசத்தை வைத்துக்கொண்டு
அப்படி பிம்பம் காட்டி
என்னைப்பார்த்து சிரித்த தெல்லாம் போதும்
எட்டு கோணல் உருவிலும்
ஒரு எட்டாத உயரத்தில்
உட்கார்ந்து கொண்டிருக்கும்
அந்த ரிஷியைத்தான் உள்ளே
உன்னிடம் உற்றுப்பார்த்தேன்.
அதற்கு இத்தனை சிரிப்பா?

பின்னால் உள்ள ரசம் போய்விட்டது போலும்.
இப்போது பிம்பமும் இல்லை.
சிரிப்பும் இல்லை.




===============================================


https://realization.org/p/ashtavakra-gita/richards.ashtavakra-gita/richards.ashtavakra-gita.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக