ஞாயிறு, 31 மார்ச், 2019

என்னைத்தேடாதே



என்னைத்தேடாதே
=============================================ருத்ரா

கடவுள் தான்
நமக்கு எப்படியெல்லாமோ
வளைந்து கொடுக்கும்
ரப்பர் ஷீட் ஜியாமெட்ரி
அதாவது டோபாலஜி.
இது எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
பூஜ்யத்தையும் தான்.
அடிப்படைத்தேற்றம் இது.
கடவுள் எல்லாம் தான்
நாத்திகமும் சேர்த்து தான்.

கடவுள் சொல்கிறார்.
நீ தேடு.
என்னைத்தேடாதே.
ஏனெனில்
நான்
உன்னில் என்னைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்.

வேத வேதாந்தங்களின்
சல்லடையில் ஒழுகிப்போனேன்.
ஞானங்களும் விஞ்ஞானங்களும்
ஒழுகிப்போயின.
தங்கி நின்ற
நான்கு வர்ணக்கசடுகளும்
பிராமண அகங்காரங்களும் தான்
உங்கள்
அர்ச்சனைகளில்.

எல்லாமதங்களும்
பாவங்களையும்
தண்டனைகளையும்
போதிக்கின்றன.
எல்லா மதங்களின் சாரம்
எல்லாம் மனித வாழ்க்கை தானே.
மனிதனை சமாதிக்குள்
தள்ளிவிட்டு
ஓ! கடவுள்களே
ஏன் இந்த பிணங்களை
வீணைகள் என்று சாதிக்கிறீர்கள்.
இவற்றை மீட்டும்போது
உங்கள் ஒப்பாரிகள் சகிக்கவில்லை.
நீங்கள் இல்லை என்று ஆனபிறகு
எதற்கு இந்த
கல்லாப்பெட்டிகளும்
கஜானாக்களும் ?

மனிதம் கூட‌
ஹிக்ஸ் போசான் மாதிரி
ஒரு திடுக்கிடும் தியரியை
தந்து கொண்டிருக்கிறது.
மனித நீதி
கண்ணுக்குத் தெரியாத‌
கதிர் வீச்சாக‌
அந்த மண்ணில் பாறையில்
ஏன்
விண்வெளியின் விலா எலும்புக்குள்ளும்
துளைத்து துளைத்துக்கேட்கிறது?

பத்தாம்பசலிகளே
மறித்துக்கொண்டு நிற்காதீர்கள்.
புதிய கேள்விகளே
இனி நம் நுழைவாசல்கள்!

====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக