தலயும் வினோத்துகளும்
===========================================ருத்ரா
தல ரசிகர்களே
உங்களுக்கு அப்பப்போ
சார்ஜ் ஏத்த
வினோத் எனும் இயக்குநர்
அஜித் புகைப்படத்தை
காட்டவேண்டியிருக்கிறது.
அந்த "போஸ்டரில்"
உங்கள் இளங்கனவுகளை
ஏணி போல் சாத்திக்கொள்கிறீர்கள்.
ஏன் தமிழ்நாடு
இப்படி ஊனம் அடைந்து போனது?
இளைஞர் வெள்ளமே!
உங்களின் சிந்திக்கும்
புயல் மையங்கள் கருக்கொள்ளாமல்
ஏன் இப்படி
மலட்டு மேகங்களிலிருந்து
"அட்டை"மழை பெய்யட்டும்
என்று
கட் அவுட்டுகளில்
உறைந்து கிடக்கின்றன?
ஒரு கதாநாகன் என்றால்
தலை அலங்காரத்தை
கருப்பு வெள்ளையாய்
வைக்கும் அளவுக்கு
கிழடு தட்டிபோன கதைக்கூளங்களிலா
நீங்கள் அடைந்து கிடப்பது!
தமிழ் மண்ணின் இளைய யுகமே!
உனக்கு
ஏன் இப்படி ஒரு வீழ்ச்சி?
ரஜனி அப்படி வந்தால்
அஜித்தும் இப்படி வரவேண்டுமா?
அரசியல் விஞ்ஞானம் என்பது
சமுதாய நாடி நரம்புகளுக்குள்
மின்னல் பாய்ச்சுவது அல்லவா!
ஆனால்
இந்த மொக்கை சினிமாக்கள்
உங்களை வெறும்
மூளி உருவங்களாய்
இலக்குகள் அற்ற சோப்புக்குமிழிகளாய்
பறக்க விடலாமா?
இந்த ஊடகங்களுக்கு
இப்படி
கலர் கலராய் பிரியாணியை
ஊட்டி கொழுக்க வைக்கும்
அந்த மாயக்கைகளுக்கும்
விசையேற்றுவது உங்கள்
சிந்தனை அற்ற மனச்சிதிலங்களே.
ட்விட்டர்களில் மில்லியன்கணக்காய்
உங்கள் குப்பைகளை
குவித்து வைப்பதால்
என்ன பயன் வந்துவிடப்போகிறது?
இந்த டிஜிடல் குப்பைகளை அப்புறப்படுத்த
ஒரு டிஜிடல் முனிசிபாலிடி தான்
தேவைப்படுகிறது.
முனிசிபாலிடிகளே இயங்கமுடியாமல்
முட்டுச்சந்தில் முனகிக்கிடக்கிறது.
மற்றதற்கான
விடியலுக்கு இங்கே என்ன வழி?
விடியலுக்கு ஆதாரமான
சிந்தனை வானமே
கந்தலாகிக்கிடக்கிறது.
இளைய புயல் மூச்சுகளே
பாக்ஸ் ஆபீஸ் சந்து பொந்துகளில்
மூச்சடங்கிப்போகாமல்
புதிய தோர் சரித்திரம் எழுத
எழுச்சி கொள்ளுங்கள்.
ஆம்!
எழுச்சி கொள்ளுங்கள்!
========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக