செவ்வாய், 26 மார்ச், 2019

எல்லோரும் இந்நாட்டு மன்னர்

எல்லோரும் இந்நாட்டு மன்னர்
=======================================================ருத்ரா

அந்த ஒரே செங்கோலை
ஒரே ஒருவன் பிடித்துக்கொண்டு
பயம் காட்டி நயம் காட்டி
இந்த மக்களை ஆட்சிசெய்வதில்
ஏதோ ஒரு மனித நியாயம்
இல்லை
என்று கண்டுபிடித்த சிந்தனையே
இந்த அம்பத்தொன்று சதவீத ஜனநாயகம்.
எனவே
நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.
அதே போல்
நாம் எல்லோரும் இந்நாட்டு கைதிகள்.
மன்னர்கள் எல்லோரும் சட்டம் மறந்தால்
மன்னர்கள் யாவருமே கைதிகள் தானே.
இப்படி மனிதனின் சிந்தனையே
அவனுக்கு
மணிமகுடமும் சூட்டுகிறது.
முட்கிரீடமும் சூட்டுகிறது.
இருக்கின்ற அமைப்பில்
இதுவே சாலச்சிறந்தது.
அதாவது "ஃபூல்ஸ் ப்ரூஃப்" சிஸ்டம்.

எனவே நாம் இப்போது
முட்டாள்களின் சாம்ராஜ்யத்தில் இருக்கிறோம்.
இன்னொருவன் தோளில் ஏறித்தான்
தொழில் முனைவோன் ஆகி
தொழில் அதிபன் ஆக முடியும்.
தொழில் செழித்தால் தான்
நாடு செழிக்கும்.
பொருளாதாரம் சிறந்து
நாட்டில் கண்ணாடி போல் பளபளப்பான‌
உயர உயர கட்டிடங்கள் முளைக்கும்.
குடிசைகள் எல்லாம் திருஷ்டிக்கழிப்பு போல்
எரிக்கப்பட்டு விடவேண்டும்.
விவசாயம்  நீர்  மலை  இதெல்லாம்
அந்த தொழில் கனவான்களுக்கு
பட்டா போட்டுக்கொடுத்து விடவேண்டும்.
நிறைய பணம் கொட்டும்.
கொட்டோ கொட்டென்று.
அதையெல்லாம் இருக்கின்ற மக்கள் தொகையை
வைத்து வகுத்து
கணித சூத்திரம் போல் ஒரு ஈவு
கணக்கிட வேண்டும்.
இப்போது "பெர் கேபிடா இன்கம்" எனும்
சராசரி தனிநபர் வருமானம்
கணக்கிடப்பட்டு விடும்.
அந்த தொழில் அதிபர்களிடம்
கோடி கோடியாய் கொடுப்போம்.
அது அந்த‌ சராசரியை கூட்டிக்கொண்டே
போகும் அல்லவா?
கோட்பாடு மிக நன்றாக இருக்கிறது.
கடைசியில்
புள்ளிவிவரம் இப்படி
புட்டு புட்டு வைத்தது.
நாட்டு மொத்த சொத்துக்களில்
முக்கால் பகுதிக்கு மேல்
இரண்டு அல்லது மூன்று சதவீத மக்களிடம் தான்
இருக்கிறது என்று.

நாம் கோடி கோடியாய் குவித்துக்கொடுத்த‌
ஓட்டுகளும்
அப்படித்தான்
நம் அரைவயிற்றுக்கஞ்சிக்கே
வேட்டு வைத்தது.
ஓட்டுத்திருவிழாவின் போது
நமக்குக்கொடுத்த‌
சவ்வு மிட்டாய் மட்டுமே மிச்சமானது.
அது
நம் வாயை சவ்வாக ஒட்டவைத்து
நம்மை ஊமைகள் ஆக்கியது.
ஐயா பசிக்குது என்று
ஊமைச்சாடைகள் காட்டினாலும்
அவர்களை அடிக்க வருவதாய்
சொல்லி
சிறைகள் தான் தரப்பட்டன.
நாம் ஏதும் சொல்ல முடியாது.
இது "ஃபூல்ஸ் ப்ரூஃப் சிஸ்டம்"
ஆர்டர்..ஆர்டர்..
மரசுத்தியல்கள் மேஜையில் தட்டப்பட்டன.

=================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக