ஞாயிறு, 17 மார்ச், 2019

வேம்பு நனை ஈர்ங்கண்

வேம்பு நனை ஈர்ங்கண்
=========================================ருத்ரா இ பரமசிவன்.


வேம்பு நனை ஈர்ங்கண் அலவன் ஆர்ப்ப
தூம்பு கொள் நறவின் மணிச்சிறைத்  தும்பி
அயல் சினை சேக்கும் அரிமணற் சேர்ப்ப!
ஓங்கு பூ வேழத்து உளை அலரி செறித்த
விரி இமைப் பூமயிர் அவள் உண்கண் வீழ்ந்து
மல்லல் களிற்று மருப்பு மாய்ந்தன்ன
புண்பட்டனை என்னை.அறிகுவை இஃது
அவள் பால் பட்ட காதல் மாத்திறம் .
அறிகுவை!அறிகுவை! மற்று எற்றுக்கு
நின் வெண்முத்துக்குடையும் ஆனை நிரையும்?
அவள் விழிநாடு வெல்லுதல் இயலுமோ
வளை நரல் பௌவம் கலன் ஊர்பு துறைவ‌
வளை கொண்டு நகை செயும் அவள் நுண் திறம்
ஈண்டு நினக்கு இறை ஈயுமோ அறிதி மன்னே!

_____________________________________________________________


 தமிழ்ச்சொல்லில் “நனை” என்பதற்கு பூவின் சிற்றரும்பு என்ற பொருள் உண்டு என நான் அறிந்து மிகவும் வியப்பு உற்றேன். சொல்லின் பொருள் வழங்கும் பரிணாமத்தில் நம் தமிழின் சிறப்பு வெளிப்படுகிறது.நனை என்றால் ஈரப்படுதல் என்றுதான் நமக்குத்தெரியும்.ஆனால் பனிப்பொழிவில் முதலில் நனவது சிறு பூக்களின் மெல் அரும்புகள் தான். அவை நனைந்து “பூவாய்” விரியும் இயற்கையை தமிழ்ப்புலவர்கள் நுட்பத்துடன் கண்டிருக்கிறார்கள். எனவே நனை என்ற வினைச்சொல்லின் அடியாய் இந்த “நனை” என்ற வினை ஆகுபெயரே அந்த “சிறு பூவின்” அரும்புக்கு ஆகி வந்துள்ளது.ஒப்பற்ற கற்பனைக்கவிஞன் “அம்மூவனார்” ஐங்குறுநூறு “மருதத்திணையில்”(30 ஆம் செய்யுள்) “வேம்புநனை அன்ன நெடுங்கண் களவன்”என்று நண்டின் கண்ணுக்கு உவமையாக வேப்பம்பூவின் நுண் அரும்பை பாடியிருக்கிறார்.இந்த வியப்பில் விரிந்த என் கற்பனையின் விளைவே நான் எழுதிய இச்சங்கநடைச் செய்யுள்.



பொழிப்புரை
============


வேம்பு நனை ஈர்ங்கண்
==============================================ருத்ரா

(தலைவியின் காதல் மாண்பு பற்றி தலைவனுக்கு தோழி சொல்லியது)



வேம்பு நனை ஈர்ங்கண் அலவன் ஆர்ப்ப
தூம்பு கொள் நறவின் மணிச்சிறைத்  தும்பி
அயல் சினை சேக்கும் அரிமணற் சேர்ப்ப!

தலைவியின் காதல் மாண்பு பற்றி தலைவனுக்கு தோழி சொல்லியது வேப்பம்பூவின் சிறிய அரும்பு போன்றதும் ஈரத்தில் உள்ளதும் ஆன கண்களையுடைய நண்டுகள் ஆர்ப்பரிக்க அழகிய சுடர்மிகு இறகுகள் கொண்ட சிறு வண்டுகள் தேன் உறிஞ்சும் நுண்குழல் மூலம்  தேன் உண்ண‌அருகில் உள்ள மரக்கிளைகளில் தங்கும் அந்த ஆற்றங்கரையில் நுண்மணல் அரித்து ஒதுங்கும்படியான துறைகள் கொண்ட தலைவனே!

ஓங்கு பூ வேழத்து உளை அலரி செறித்த
விரி இமைப் பூமயிர் அவள் உண்கண் வீழ்ந்து
மல்லல் களிற்று மருப்பு மாய்ந்தன்ன
புண்பட்டனை என்னை.அறிகுவை இஃது

கரும்பின் உச்சியில் உள்ள சிறுபூக்கள் செழித்துப் படபடப்பதைப்போல் அகன்ற இமைமயிர்களை அசைத்துப்படபடக்கும் தலைவியின் "விழுங்கும்" தன்மை கொண்ட கண்களில் விழுந்த தலைவனே. வலிமைமிக்க ஆண் யானையின்நெடிய தந்தம் (சேற்றில்)வீழ்ந்து புதைந்து மறைந்தது போல நீயும் புண்பட்டாயோ? அதன் காரணம் இதுவென அறிக.


அவள் பால் பட்ட காதல் மாத்திறம்
அறிகுவை!அறிகுவை! மற்று எற்றுக்கு
நின் வெண்முத்துக்குடையும் ஆனை நிரையும்?

 அவள் மீது கொண்ட காதலின் பெருவலிமையால்தான் இது என அறிக.இப்படி இருக்க உனக்கு எதற்கு  அந்த வெண்கொற்றக்குடையும் பல யானைகளின் படையும்?


அவள் விழிநாடு வெல்லுதல் இயலுமோ
வளை நரல் பௌவம் கலன் ஊர்பு துறைவ‌
வளை கொண்டு நகை செயும் அவள் நுண் திறம்
ஈண்டு நினக்கு இறை ஈயுமோ அறிதி மன்னே!

அவள் விழிகள் எனும் அந்த நாட்டை உன்னால் வெல்லமுடியுமா? சங்குகள் ஒலிக்கின்ற கடலில் கப்பல்கள் ஓட்டிச் சென்று வெற்றிகள் குவிக்கும் கடற்கரை நாட்டுத் தலைவனே.வளையல்களில் ஒலிகொண்டு
ஒரு கள்ளச்சிரிப்பு உதிர்த்து ஒலிக்கும் அவள் காதலின் நுட்பம் உன்னிடம் தோற்குமோ? அது உனக்கு கப்பம் கட்டும் அளவுக்கு அவள் அடிபணிவாளோ? இதையும் நீ அறிந்து கொள் ? காதலியிடம் தோற்பதே காதலின் வெற்றி என்றும் அறிவாயாக.

===============================================ருத்ரா இ.பரமசிவன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக