செவ்வாய், 26 மார்ச், 2019

தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் வாக்குறுதிகள்
===========================================ருத்ரா

கனவைக்கடைந்து செய்த சிற்பம்.
உண்மையின் முகமூடி பொய்.
பொய்யின் முகமூடி உண்மை.
மெய்யும் பொய்யும்
சங்கமம் ஆகி வர்ணங்கள் இறைக்கும்
அந்தி வானம் இது.
தேர்தல் எனும் மந்திரச்சொல்
தெருக்களில் தூவப்பட்டவுடன்
கியூவரிசை நீண்டு நீண்டு
வளைந்து
அனக்கொண்டாவாய் வாய்பிளக்கும்.
ஒவ்வொரு தடவையும்
தன்னையே இரையாக விழுங்கி
தன்னையே இழந்து
தன்னையே கழன்று
இந்த சுதந்திரமும் ஜனநாயகமும்
தனக்குள்ளேயே சமாதியாகும்
இந்த மாயத்திருவிழாவில்
தெய்வங்கள் கூட‌
கரன்சிக்கு கை நீட்டும்.
இலவசமாய் ஒரு
காளை வாகனம் கிடைத்தால் போதும்
சிவனுக்கு.
பாம்புப்படுக்கையை இலவசமாக‌
தந்தால் போதும் பெருமாளுக்கு.
நாற்காலிகளை
அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.
நாற்காலிகளை கொடுத்தவர்கள்
மட்டும்
"நாற்காலி"களாக‌
கால்நடைப்பயணம் தொடங்கவேண்டும்.
பட்டா வேண்டுமென்றால்
கட்டு கட்டாக பணம்
பண்டமாற்றம் செய்யப்படவேண்டும்.
சான்றிதழ் வேண்டுமென்றால்
குதிகால் எலும்புகள் தேய்ந்து
உடம்பும் இற்றுப்போக வேண்டும்.
அசோக சக்கரம் என்றால் அது
தர்ம சக்கரம்.
ஆனால் அது கரன்சிகளில்
அதர்ம சக்கரமாய் சுழன்றால் தான்
அலுவல‌க சக்கரங்கள் சுழலும்.
மக்களின் ரத்தமும் வேர்வையும் தான்
இதற்கு எண்ணெய் போடுகிறது.
ஓட்டுகள் போடும்போது
அடகு வைக்கப்பட்ட
தன்மானங்கள்
வாக்குகளுக்கு வாங்கப்பட்ட
அந்த சில்லரை வருமானங்களில்
நொறுங்கியே போனது.
ஒவ்வொரு தடவையும்
பூகம்பத்தில் இடிந்து தரைமட்டம் ஆன‌
வீடுகள் போல ஆனது
நம் ஜனநாயகம்.
இந்த இடிபாடுகளிலிருந்து
ஒரு சீற்றமாக எப்போது
அந்த
இடி முழக்கம் வெளிப்படும்?

==============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக