பொங்கிவரும் புது நிலவு..
================================================ருத்ரா
நாசா ஏவுகணைகள்
நிலவை வருடி வருடி ஒரு
உண்மையைக் கண்டு பிடித்திருக்கிறது
ஆம்..
அங்கும் தண்ணீர்
வேர் விட்டு கிளைத்து இருக்கிறதாம்.
நிலவுக்கும் வியர்த்திருக்கிறது.
அந்த ஓடையிலும்
நான் படகு செலுத்திக்கொண்டிருந்தேன்
அருகே என் நிலவுடன்.
ஆம் ..என் ஆருயிர்க்காதலியுடன்.
இந்த நிலவுக்கு நிலவு எது?
பெரிய நிலவாய் தெரியும் பூமி தான்
என்று சொல்வீர்கள்.
ஆனால்
அவள் தான் அந்த நிலவுக்கு நிலவு.
குலுங்கி குலுங்கி
சிரித்த அவள் முகம் கண்டு
நிலவும் வியந்து போனது.
இப்போது அது பூமிக்கு
ஆயிரம் பௌர்ணமியை தன்
பெரிய பிம்பமாக்கி
அனுப்புகிறது.
அவள் புன்னகைச்சிதறல்
வெள்ளி லாவா வாய்
இந்த நிலவெங்கும் இழைந்து ஓடுகிறது.
பார்..இந்த நிலவை!
உன்னைக்கண்டு பொறாமையில்
இருந்தபோதும்
பூரித்து பூரித்து
பொங்கி வழிகிறது.
..........
ஒரு கனவுக்குள் புதைந்து போனவன்
என்னென்னவோ பாடிக்கொண்டிருந்தேன்.
"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது..."
டேய்..டேய்
சூரியன் எழுந்து மணி ஒன்பது
ஆகப்போகிறது..
எரியாமல் என்னடா செய்யும்?
அம்மா திட்ட ஆரம்பித்துவிட்டாள்..
=================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக