குவாண்டம் எனும் பொய்மான் கரடு.
குவாண்டம் எனும் பொய்மான் கரடு.
=================================================
ருத்ரா இ பரமசிவன்.
குவாண்டம் என்பதை கையில் பிடிக்க முடியுமா?
மேலே கண்ட தலைப்பு வேடிக்கையாய் இல்லை? நுண் உயிர் எதனையும் நாம் கையில் பிடித்த தில்லை.ஆனால் அவை நம் உடம்பில் உள்ளது.நுண் உயிரியையும் விட நுண்மையான அதாவது அணுக்கருப்பொருள் துகள்களான ஒரு எலக்ட்ரானை நம் கையில் பிடிக்க முடியுமா? என்ற கேள்வியே அங்கு வேறு விதமாக கேட்க பட்டுள்ளது.ஆற்றல் வடிவம் அலை வடிவமா? துகள் வடிவமா? என்ற கேள்வியே இங்கு இன்னும் ஊசி முனையாய்
நம்மை உறுத்துகிறது.ஆனால் இந்த ஊசி முனையில் தான் இந்த பிரபஞ்சமே
இயங்கிவருகிறது என்றால் அது எவ்வளவு ஆச்சரியம்?
குவாண்டம் இயற்பியல் எங்கும் இருக்கும்.எதிலும் இருக்கும்.நீல்ஸ் போர் ஹெய்ஸன்பர்க ஸ்க்ரோடிங்கர் ஃபெய்ன்மன் பெல் பி.ஏ டிராக் போன்ற உலக விஞ்ஞானிகள் செதுக்கி செதுக்கி இதன் உருவத்தை "பிண்டம் பிடிக்க"முடியுமா?என்று செய்திருக்கும் முயற்சிகளில் எல்லாம் நுண்கணிதம் நுழைந்து பார்த்து அதன் "பல்லை (பல்ஸை)" பிடித்துப்பார்க்க முயன்று இருக்கிறது.
ஆனால் "பொய்மை வாய்மையிடத்த"..என்ற வள்ளுவர் குறள் மட்டுமே குவாண்டம் கோட்பாட்டை சரியாக கணித்திருக்கிறது."வாய்மையின் அர்த்தமே பொய்மை தான்"என்று நான் சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்?ஆம்.இப்படியொரு மயக்கத்தை ஏற்படுத்திய விஞ்ஞான கோட்பாடு எது என்றால் அது "குவாண்டம் கோட்பாடு" தான்.
"இருக்கும் ஆனால் இருக்காது " என்ற காமெடி பீஸ் தான் இக்கோட்பாடு.துகள் (பார்டிகிள்) இருப்பிடம் (பொசிஷன்)எனும் புள்ளியிலிருந்து அதன் நகர்ச்சி அல்லது உந்தம் (மொமென்டம்) நிகழ்ந்து முடிந்த நிலையை அளவு படுத்துவதே குவாண்டம் ஆகும்.
அண்டம் என்பது எல்லையற்ற பேராற்றல் அடர்த்தியான துகள் பற்றியது.அங்கே பில்லியன் பில்லியன்..ஒளியாண்டுகள் கூட ஏதோ கொசுக்களின் பரிமாணம் தான்.20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரைக்கும் விஞ்ஞானிகள் இந்த பெரும் பரிமாணங்களில் (மேக்ரோ டைமன்ஷன்ஸ்)மட்டுமே தங்கள் இயற்பியல் சூத்திரங்கள் கொண்டு வேலி முடைந்து கொண்டிருந்தனர்.உலகப்புகழ் பெற்ற ஐன்ஸ்ட்டீனின் பொதுச்சார்பு (ஜெனரல் ரிலேடிவிடி) எல்லாவற்றையும் மறைத்த நிழலாய் இருந்தது.ஆனால் 1900ல் மேக்ஸிம் ப்ளாங்க் ஒரு அடிப்படையான மிக மிக நுண்ணிய துகள் அல்லது ஆற்றல் துளி என்னவாக இருக்கும் என்ற கணக்கீட்டைத்துவக்கினார்.அதற்கும் ஐன்ஸ்ட்டின் கண்டுபிடித்த "ஒளி மின் இழைவு கோட்பாடு"(ஃபோட்டொ எலக்ட்ரிக் எஃப்ஃபெக்ட்) தான் பாதை போட்டது.அதன் பிறகு விஞ்ஞானிகளின் குறி இந்த "நுண்ணிய பரிமாணம்"நோக்கி (மைக்ரோடைமன்ஷன்ஸ்) தாவியது.1913ல் நீல்ஸ் போர் குவாண்டம் இயக்கவியலை (குவாண்டம் மெக்கானிக்ஸ்) அறிவித்தார்.
குவாண்டம் ரியாலிட்டி அல்லது அளபடைய மெய்ப்பாடு என்பது என்ன?
மேலே சொன்ன எலக்ட்ரான் ப்ரோட்டான் நியூட்ரான் போன்றவை எல்லாம்
மேலை நாட்டில் உள்ள அணுப்பிளப்பு அல்லது அணு சேர்ப்பு களின் அணு உலையில் உள்ள அணுக்குமிழ் அறைக்குள் (பபிள் சேம்பர்) படம்பிடித்தாற்போல் கண்டு கொண்டனர்.ஆனால் இவற்றின் உள் இயக்கமான "அளபடைய இயக்கம்"(குவாண்டம் மெக்கானிக்ஸ்) பற்றிய படப்பிடிப்பு மட்டும் நமக்கு இன்னும் துலங்க வில்லை.
கல்கி தனது "பொய்மான் கரடு" எனும் நாவலில் வெகு தூரத்தில் உள்ள மலையின் மீது உள்ள கரடு எனும் மேடு சூரிய ஒளியில் காட்டும் நிழல்
ஒரு "பாயும் மான்" போல தோன்றுவதாக வர்ணனை செய்துள்ளார்.அதன் அருகே சென்று பார்க்கும் போது நிழல் மட்டுமே தெரியும்.மான் மறைந்து விடும்.அது போலவே ஆற்றல் நகர்வை புள்ளி புள்ளி யாக நாம் பார்க்கிறோம்
என்று வைத்துக்கொள்வோம்.அதன் புள்ளிநிலையையும் (பொசிஷன்)
அதன் நகர்வு நிலை (மொமெண்ட்டம் )யையும் பெருக்கல் செய்தால் அதன் பெருக்கல் மதிப்பு கணக்கியல் முறைக்கு உட்படவேண்டும் அல்லவா.அப்படி
உடன்படாத ஒரு மதிப்பையே அந்த குவாண்டம் காட்டுவதாக கூறு கிறார் "ஹெய்சன்பர்க் " எனும் ஜெர்மானிய அறிவியலாளர்.அதாவது நாம் அந்த ஆற்றல் நிலையை அளவுபடுத்தும்போதே (குவாண்டமைஸ் ) அது தன் நிலையிலிருந்து நழுவி விடுகிறது.இது அந்த கல்கியின் நாவலில் வரும் "பொய்மான் கரடு" போன்றதே .இந்த உறுதியற்ற நிலையை அவர் "நிச்சயமின்மை கோட்பாடு" (அன்செர்ட்டேன்டி ப்ரின்சிபிள்) என்கிறார்.
இந்த உறுதியற்ற வடிவம் பார்க்கப்பட முடியுமா? பார்க்க முடியும் என்றால் தான் அது அளக்கப்பட முடியும் (குவாண்டம் அப்சர்வபிள் ) ஆனால் ஒரு புள்ளியி லிருந்து இன்னொரு புள்ளிக்கு அது நகரும் விசையே உந்தம் ஆகும்.
அந்த இடை தூரத்தில் நிகழும் நகர் விசை உண்மையானதா? இல்லை பேய் வடிவமா? (ஸ்பூக்கி ஆக்சன் ஆஃ ப் டிஸ்டன்ஸ் ) என்று சார்புகோட்பாட்டை
கண்டு பிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின் வினா எழுப்பினார்.அதனால்
தான் குவாண்டம் என்பது "பொய் மான்"கரடு தானா என்ற ஐயம் எல்லா இயற்பியல் அறிஞர்களுக்கும் எழுந்தது.1927 ல் கிளப்பிய அந்த ஐயம்
90 வருடங்களுக்குப்பிறகு "கிரிஃபித்" பல்கலைகழகத்தில் (குயின்ஸ் லேண்ட் ஆஸ்திரேலியா) தெளிவாக்கப்பட்டது. மேலே காணும் படம் குவாண்டத்தின் அந்த பொய் (மெய்)மான் கரடு தான். விவரம் வரும் கட்டுரையில் பார்ப்போம்.
======================================================
லிங்க் :(நன்றியுடன்)
http://futurism.com/quantum-experiment-verifiesspooky-action-at-a-distance-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக