சனி, 2 மார்ச், 2019

பிக்பேங்க்




பிக்பேங்க்
======================================ருத்ரா

ஐன்ஸ்டீன் சொன்ன
ஸ்பேஸ் டைம் சூத்திரக்கயிறு
அன்று ஒரு நாள்
பிரபஞ்சத்தின் நாபிக்குழியில்
அறுந்து வெடித்தது.
அதுவே பிக்பேங்க் எனும்
பிரபஞ்சத்தின் குவா குவா!

சமுதாய வெடிப்பின் ஆற்றலிழை
நம்மிடையே தான்
எங்கோ
சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
மக்கள் ஈசல்களா?
இல்லை
அவர்கள்
ஒரு பெரும் மாற்றத்தின்
நெருக்கடித்திருப்பத்தின்
சந்தி முனையா?
மொழி என்றும்
இனமென்றும்
மதமென்றும்
சாதியென்றும்
பல போர்வைகளில்
படுத்துத்தூங்கும்
உறக்கத்தின் பெட்டகமா?
வரலாற்று மைல் கல்லில் எல்லாம்
வரலாற்றையே மறைத்துக்கொண்ட‌
மஞ்சளும் குங்குமமும்
கோவில் கட்டிக்கொண்டு
ஒரு தேக்கத்தின் அடையாளத்தை
கும்பமேளாவாய் கொண்டாட்டம்
நடத்துகிறது.
கூட்டணி நிகழ்வுகள்
கூத்துக்கள் நடத்துகின்றன.
எல்லைக்கோடுகள்
தொல்லைக்கோடுகளாய்
தேசபக்தியின் சிக்கி முக்கி கல் கொண்டு
சொக்கப்பனை கொளுத்த
தயார் ஆகிறது.
தீவிரவாத கும்பல்கள்
நம் ஜனநாயகத்தை சுட்டுப்பொசுக்க
சதிகள் தீட்டுகின்றன.
நம் மக்களின் நரம்புகள் புடைக்கின்றன.
இப்போது எல்லாமே
பின்னுக்குத்தள்ளப்படுகின்றன.
நம் ஜனநாயக உயிர்த்துடிப்புகளும் தான்.
வெஸ்டெட்  இண்டெரஸ்ட்ஸ் எனப்படும்
போலி அக்கறைவாதிகளின் நோக்கங்களில்
நம் ஓட்டுகள் எனும் உயிர் செல்கள்
மொத்தமாய்  பசித்த பகாசுரன் களின்
வாய்க்குள் விழுங்கப்படும்
அபாயமும் புதைந்தே கிடக்கிறது.
நாளை
ஜெயித்த அம்பத்தொண்ணு பேர்
தோற்ற நாற்பத்தொன்பது பேரை
நாடு கடத்தினாலும் கடத்திவிடலாம்.
போலியான தேசபக்தியின்  தீ
ஒரு அணு குண்டை விட மோசமானது.
மக்களின் சிந்தனைக்குள்
படுத்திருக்கும்
அந்த நியாய சித்தனை
என்றைக்கு நிமிர்ந்து விழிக்கப்போகிறது?
ஓட்டுக்கள் வெறும் கைகள் அல்ல!
அவை சிந்தனைப்பிரளயங்களின்
சின்னங்கள்!
தந்திரங்களின்  சாணக்கியங்கள்
வெட்டும்
பணங்களின் "பிளாக்" ஹோல் களில்
ஜனநாயகப்பிரபஞ்சம்
வீழ்ந்து விடுவதை தடுக்கும்
இன்னொரு "பிக்பேங்க்"
இந்த ஓட்டுகளின் ஆற்றல் வீச்சில்
நிகழ்ந்திடட்டும்!
வாழ்க ஜனநாயகம்!
வெல்க மக்கள் நாயகம்!

====================================================











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக