வியாழன், 7 மார்ச், 2019

தாய்



தாய்
==============================================ருத்ரா

பட்டாம்பூச்சியின் கூட்டுப்புழுத் தவம்
கலைகையில்
வானத்தின் சிறகுகள்
வந்து ஒட்டிக்கொள்கின்றன.
தாயின் கருப்பை இனிப்பை
நக்கிப்பார்த்து நெஞ்சை வருடிக்கொள்ள‌
பிரபஞ்சமே ஏற்படுத்திய‌
பழைய ஏற்பாட்டுக்கும் பழைய ஏற்பாடே
தாய்.
புதிய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாடே
அன்னை.

நான் இருந்த சுவடு...
நான் சுருட்டி மடங்கிக்கிடந்த அந்த கூடு...
ஒரு சதைக்கூழ்க்கொடியில்
எனக்கு
உயிர் மின்சாரம் பாய்ச்சிய
அந்த கரு உலைக்கூடம்...
இருட்டைத்தின்று
ஒளியை உமிழும்
ஒரு அற்புத பரிணாமத்தின்
முதல் புத்தகத்தின்
முதல் பக்கம்..
இன்னும் என்ன சொல்ல‌
அந்த மாணிக்க வயிற்றின்
மணி விளக்கக்கோயில் பற்றி..
இந்த மூளியான வரிகளைக்கொண்டு
என்னை
இழுத்து இழுத்து போர்த்திக்கொள்கிறேன்.
தீயின் நாக்குகளுக்கும்
மண்ணின் புழுக்களுக்கும்
அந்த அர்த்தத்தை
சொல்லிக்கொடுக்கப்போகிறேன்.

கொள்ளிக்குடம் உடைத்து துளை வழியே
உயிர்க்கண்ணீர் பெருக்கும்
அந்த எருமைக்காரன் வரையும்
கார்ட்டூன் சித்திரம்
சிதைகள் வழியே எரிக்கும்
தூரிகைக்கொளுந்துகளில்
நான் படர்வது....
அம்மா..அது உன் உயிரோவியம்.

டி என் ஏ ..ஆர் என் ஏ செய்த‌
சங்கிலிப்பிணைப்பை அறியாத மூடர்கள்
ஒண்ணரைப்பவுன் சங்கிலி குறைகிறது என்று
உன்னை...
தினம் தினம் சுட்டு கொள்ளிவைத்தார்களே!
இந்த விலங்குகளை விலக்கிக்கொண்டு
பார்த்தால்
அந்த மூல விலங்குகள் கூட‌
எள்ளி நகையாடும்.
இன்னும் எத்தனை நாளைக்கு
குரங்கிலிருந்து மனிதன் என்று
சொல்லிக்கொண்டிருப்பது?
மனிதனிலிருந்து
இன்னும் ஒரு கொடிய மிருகம்
கொப்பளித்துக்கொண்டிருக்கிறது!
தாயே!
உன்னால் தான் அதற்கு ஒரு
அன்பால் அணை கட்ட முடிகிறது?
மீண்டும் ஒரு பிரளயம் வருவதற்குள்
அம்மா
உன் "நோவா" எனும் தாய்மைக்கப்பல்
உயிர்களை உயிரால்
அடைகாக்கட்டும்.

பசியாய் எரிந்ததை முலைப்
பால் கொண்டு அணைத்தது.
அது தும்மியதில் இருமியதில் கூட‌
இந்த பிஞ்சுத்துடிப்புகளின்
பிரளயம் தான் இருந்தது.
அகர முதல எழுத்தெல்லாம்
அடுக்களையில் விறகாய் எரிந்தது.
பிரம்ம சூத்திரம் கூட‌
சொல் இடறி விழுந்து
பேய் முழி முழித்தது.
கடவுள் இலக்கணம்
கோடி கோடி வாக்கியங்களில்...
முற்றுப்பெறாமல்
மூலையில் கிடக்கிறது.

தாய்க்குள் தாய்
தாய்க்கு வெளியில் தாய்
தாயைச்சுற்றிலும் தாய்
தாய்..
ஐன்ஸ்ட்டீன் சொன்னான்..
ப்ளாக் ஹோல்...சிங்குலாரிடி..
வோர்ம் ஹோல்..லேம்ப்டா எனும் கான்ஸ்டண்ட..
கோவேரியன்ட டென்ஸார் ஃபீல்டு..
வெய்ல்..ரிக்கி..டென்சார்..
இன்னும் என்ன தான் சொல்வது?

தன்னை வயிறுமுட்ட
கருப்பிடித்து வைத்துக்கொண்டு
என் பசியை அவள் உணவாக்கி
உண்டு கொள்ள
முக்கி முனகிக்கொண்டு
மூச்சைப்பிடித்துக்கொண்டு
தவித்தாளே..
அதை என்ன சொல்வது?
அவனும்
அவன் தாயின் சூத்திரம்
அப்படித்தான் சொன்னான்..
இன்னும்
யாருக்கும் அது விளங்கவே இல்லை.

==============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக