ஞாயிறு, 3 மார்ச், 2019

மீன் கடை இரைச்சல்.


மீன் கடை இரைச்சல்.
=================================================ருத்ரா

என்ன இது?
மீன் கடை இரைச்சல்.
இந்த ஜனநாயகக்கடலிலிருந்து
பிடிக்கப்பட்ட ஓட்டு மீன்கள்
இன்னும் துடித்துக்கொண்டிருக்கின்றன.
வாய்பிளந்து வாய்பிளந்து
சிந்தனை எனும் ஆக்சிஜனை
உயிர்க்காற்றாய்
உண்ணுவதற்கு அவை
துடித்துக்கொண்டே இருக்கின்றன.
துடிக்க துடிக்க அவை
சிப்பங்கள் ஆக்கப்படுகின்றன.
அவற்றின் நியாயமான ஆசைகளையே
பேராசைகள் ஆக்கி
அவற்றின் உரிமைகளைக்கூட‌
தூண்டிற் புழுக்களில்
இலவசங்கள் போல் செருகி செருகி
அவற்றின்
உயிர்கள் மாய்க்கப்படுகின்றன.
ஒரு தேதி அறிவிக்கப்பட்ட பின்
அந்த விரல்களின் "க்ளிக்கு"களால்
அவை பனிப்பெட்டகம் எனும்
உறைவகத்துள்
குவிக்கப்படுகின்றன.
அவையே மீண்டும் மீண்டும்
சாசனம் ஆகின்றன.
சனாதனம் ஆகின்றன.
சாதி  மதங்களின்
அந்த அசுரக்கைகள்
 இந்த மனங்களையெல்லாம்
மரத்துப்போக வைத்து
அவற்றின் உட்குரல்களையெல்லாம்
வழித்து எறிகின்றன.
வந்தேமாதரங்களுக்குள்ளும்
ரத்த விளாறுகள் தான்.
நான்கு வர்ண தூண்டில் முள்ளில்
இந்த மீன்கள் வேட்டையாடப்படும்
அவர்களின் "இந்து மகா சமுத்திரம்"
ஒரு நாள்
மனித நியாயங்கள் அலைவிரிக்கும்
விடியலின் ஒரு பெரும் சமுத்திரம்
ஆகி விடும் சரித்திரத்தின்
விளிம்பு முனை இதோ அருகில் தான்.
சிந்தியுங்கள்
அது அருகில் வந்து விடும் என்று.
ஓட்டுக்கு வலைவீசும்
இந்த வியாபாரிகளுக்கு
இந்த மீன் குழம்பு சுவை தான்.
ஆனால் அவை யாவும்
ஒரு நாள் மின்னல் குழம்பு ஆகும்.
அப்போது எல்லாம் கரியாகும்.
அப்போது எல்லாம் சரியாகும்.
இப்போது...
கடல் அலைகள்..
ஜெயஹே ஜெயஹே..என்று
பாடிக் கொண்டிருக்கின்றன.

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக