திங்கள், 4 மார்ச், 2019

ஜனநாயகத்தின் நிறம்

ஜனநாயகத்தின் நிறம்
===================================================ருத்ரா

நடைப்பயிற்சியில்
நான் சாலைகளின் மலைப்பாம்பினால்
விழுங்கபட்டு அமுக்கப்பட்டு நகர்த்தப்பட்டு
சென்று கொண்டிருந்தேன்.
வாகனங்கள் கரியும் புகையுமாய்
மலஜலம் கழித்தது
இந்த பாம்பு வயிற்றுக்குள்
மேலும் என் மூச்சை ஆபாசப்படுத்திவிட்டது.
மக்களின் நெரிசலே
ஜனநாயகத்தின் புனிதம்.
மேலை நாட்டு பள பள வென
மின்னி வழுக்கும் சாலைகளும்
ஒப்புமைக்கு கண்ணில் தோன்றுகின்றன.

மக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்
ஊர்கின்றனர்.
டாலர் நாணங்களின் சிதறல்களாய்..

ஆனால்
அழகிய பெரிய பெரிய கட்டிடங்களில்
அதன் கண்ணாடிச்சுவர்களில் கூட‌
பிகினிகளில் பெரிய பெரிய கண்களில்
பெண்கள் விளம்பரம் ஆகின்றனர்.
ஆனால் இதுவும் பாம்பு தான்.
நல்ல பாம்பின் படமாய்
பிரம்மாண்டமாய் நம்மை பிரமிக்க வைத்து
மயக்க வைக்கின்றன.
நம் கொழுத்த ஜனநாயகத்தில்
மக்கள் கூட்டங்களாய்
சிப்பங்களாய் இறைந்து கிடக்கின்றனர்.
அவர்களின் மெலிந்த ஜனநாயகத்தில்
பணங்களே பூதங்கள்.
..

நாம் என்றைக்கு பூதம் காட்டுவது?
நடைபயிற்சி முடிந்து
வீடு திரும்பும் சந்துக்கு
நான் திரும்பிய வேளையில்...

டமார்.....

எனக்கு சத்தம் எதுவும் கேட்கவில்லை.
நான் தார்ரோட்டை
ரத்தத்தால் குளிப்பாட்டிக்கொண்டு
நம் ஜனநாயகத்தின் நிறத்தை
காட்டிக்கிடந்தேன்.

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக