செவ்வாய், 19 மார்ச், 2019

பொறிகளுக்குள்...


பொறிகளுக்குள்...
============================================ருத்ரா

என்னை ஏன் இப்படி
தட்டி தட்டி வதைக்கிறீர்கள்?
உங்கள் கனவுகள்
இங்கு ப்ரோகிராம்
ஆக்கப்பட்டிருக்கவில்லை.
உயர உயரமாய்
அவர்கள் பறக்கவிட்ட பலூன்கள்
உங்கள்
ஏக்கப்பெருமூச்சுகளைக்கொண்டு
அடைக்கப்பட்டவை.
அவை மூச்சிழந்து போகும்போது
உங்கள் விரல் பொட்டுகள் மட்டுமே
மிஞ்சி நிற்கும்.
எங்களுக்கும் தெரியும்.
தெரிந்தே தான் நிற்கிறோம் என்று
நீங்கள் முணு முணுப்பது
இன்னும் பலமாய் ஒலிக்கவில்லை.
பொறிகலங்கிய
கணிப்பொறிகளின்
கனல் தெறிக்கும் குரல் இது.
அவற்றின் குரல் கேட்கிறதா?

முட்டாள் தனத்தை
கல்வெட்டில் செதுக்கிவிட்டு
சிந்திக்கும் தருணங்களை
உங்கள் கண்ணீரில் எழுதுகின்றீர்கள்.
பொறிகளுக்குள்
அகப்பட்ட எலிகளாய்
 மசால்  வடை தேடியதெல்லாம் போதும்!
உங்கள் மனங்களைத் தேடுங்கள்.
அதன் வலிகளைபோக்கும்
வழிகளைத்தேடுங்கள்.
"டாஸ்மாக்கின்" குவார்ட்டர் கட்டிங்குகளில்
உங்கள் பொருளாதாரப்புத்தகம்
எழுதப்படவில்லை  என்பதை
இப்போது புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் குடியுரிமை
இந்த "குடி உரிமையில்"
புதைந்து போய்விட்டது என்பதை
இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.
குறிக்கோள் இல்லாது
ஓட்டு போட்டு ஓட்டு போட்டு
இந்த ஓட்டைப்பானையில்
தண்ணீர் பிடித்தா
உங்கள் தாகம் தீர்க்கப்போகிறீர்கள்?
வெறுமே
வரிசையில் நிற்பதற்குப்பெயர்
தேர்தல் அல்ல.
வதை படும் அவலங்களின்
வரலாற்றை
திருப்பி விரட்டுவதே
சரியான தேர்தல்!

============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக