செவ்வாய், 12 மார்ச், 2019

இசைஞானி இளையராஜா அவர்களே!

இசைஞானி இளையராஜா அவர்களே!
========================================ருத்ரா இ பரமசிவன்.


இசைஞானி இளையராஜா
அவர்களே!
உங்கள் இசை அமைப்புக்கு
உலகத்தமிழர்கள் எல்லோரும்
தலை வணங்கி
தலையாட்டுவது
நீங்கள் ஒரு இசைக்கடல் என்பதை
நிறுவி விட்டது.
உங்கள் மெட்டுகள்
உங்கள் ஆர்மோனியக் கர்ப்பத்திலிருந்து
தெறித்தவை தான்.
அதன் பணமதிப்புகள்
அங்கே இங்கே சிதறாமல்
ஒரு காப்புரிமையில்
காக்கப்படவேண்டும் என்பதும்
யாராலும் மறுக்க முடியாது.
ஆனால்
ஒரு முழுநீள வர்ணப்படத்தை
எந்தப் பதிவும் இல்லாமல்
ஒரு கச்சாபிலிமாய் ஓடவிட்டு
பார்த்தால் எப்படியிருக்குமோ
அப்படித்தான்
உங்கள் ஹம்மிங் மெட்டுகளும்
எங்களுக்கு இருக்கும்.
இருட்டின் குரல் எப்படி இனிமையாய்
இருக்கும்?
உங்கள் இசைஅமைப்புக்கு
மகுடம் சூட்டிய‌
திரு.எஸ் பி பி அவர்களும்
திருமதி.ஜானகி அவர்களும்
இல்லாமல்
பலப்பல இசைக்கருவிகளை
நீங்கள் வெறும் மொட்டைப்படகு போல்
வைத்துக்கொண்டு
அந்த நிகழ்ச்சியை நடத்துவது போல் தான்
எங்களுக்குத் தோன்றுகிறது.
சித்ரா அவர்களின் தீங்குரல் இசை
உங்கள் ஆத்மாவின் இசையை
எங்களுக்கு நன்றாகவே
தொட்டுக்காட்டி இருக்கிறது!
உங்கள் இசை
தனிக்கீற்று தான்.
அதன் காற்று உயிர்க்க‌
பாடல் எழுதியவர்கள்
பாடலை பாடியவர்கள்
காட்சிகளை நடித்தவர்கள்
கதையை இயக்கி
படமாய் வார்த்துத்தந்தவர்கள்
இவர்களின் வேர்வைத்துளிகளிலும்
இந்த இசை மாக்கடல்
அலைகள் எழுப்புகின்றன.
ஆனால்
இசை அமைத்த எனக்கு மட்டுமே
கிரீடம் என்பது போல்
உங்கள் ஆளுமையை அந்த மேடையில்
வெளிக்காட்டுகிறீர்கள்.
ஒரு கலைஞனுக்கு
அவன் கர்வம் தான் கலை
என்பதில் எந்த முரண்பாடும் இல்லை.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
உங்கள் மொழியிலேயே
ஒரு பொடியன் தான்.
இசையை விட்டு விட்டு
அவன் "ஸ்கூலுக்கு" போகட்டும் என்று
நீங்கள் சொன்னதும் கூட
அவருக்கு "ஆசீர்வாதம்"தான்.
இசைக்குயில் சித்ரா அவர்களுடன்
அவர் பணியாற்றியபோது
"கீ போர்டை இங்கே வை..
அங்கே கொண்டு போ"
என்ற ஏவல்களுக்கு மட்டுமே
அவர் அங்கு இருந்தார் என்றும்
ஒரு தகவல் சொல்லப்படுகிறது.
அவர் அப்படித்தான்  தகுதியானவர் என்று
உங்கள் இறைவர்கள் உங்களுக்கு
சொல்லியிருக்கலாம்.
அவருக்கு "இறைவன் மிகப்பெரியவன்"
"தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன"
என்று உலக அளவில்
தமிழின் குரல் கேட்க செய்தவர் அவர்.

மேலும்
உங்கள் இசையை
அவர்கள் படங்களில்
பயன்படுத்தவில்லையே
அவர்களை ஏன் இங்கு அழைக்கிறீர்கள்
என்ற தொனியில்
இயக்குனர் சங்கர் அவர்களையும்
நடிகர் விக்கிரம் அவர்களையும்
பற்றி விமர்சித்தீர்களே!
அவர்களும் எளிய ரசிகர்களாகத்தான்
உங்களை பாராட்ட வந்திருக்கிறார்கள்.
ஒரு சிறந்த வெள்ளிப்படலமான
அந்த நிகழ்ச்சியில்
இவை  கரும்புள்ளிகளாக  அல்லவா
தோன்றின.
அதில் ஏதாவது
இசை"ஞானி" என்ற பெயருக்கேற்ற‌
நியாயம் இருக்கிறதா?
இதை
ஜனனி ஜனனி என்று
உருகிப்பாடுகிறீர்களே
அந்த அன்னையிடமே கேளுங்கள்.
அல்லது
உங்கள் மனசாட்சியின் உரசல்களில்
வரும் தீப்பொறிகளில்
அதன் வெளிச்சத்தை தேடுங்கள்.
உங்கள் மனத்தை
துன்புறுத்துவதற்கோ
இல்லை
உங்கள் பெயரை மாசு படுத்தவோ
இதை எழுதவில்லை.
இதற்கு முன் இசையமைத்த‌
அந்த இசைப்புயல்கள் எல்லாம்
மக்கள் மனதை வருடிச்சென்றார்கள்.
நீங்கள் மட்டும் தான்
இப்படி நெருடிச்செல்கிறீர்கள்!
அந்த"வேப்பந்தோப்புக்குயில்கள்"
கூவினாலும்
அவற்றின் சிறகுகளை
சிறைப்படுத்தி விடுவீர்களோ
என அவை அஞ்சுகின்றன.
இந்த அலை ஓசைகள் கூட உங்களுக்கு
இசை வடிவங்கள் தந்திருக்கலாம்.
ஆனால் அந்த அலை ஓசைகள் கூட‌
உங்களுக்கு காசோலைகள் தரவேண்டும்
என்று
வழக்குப்போட்டாலும் போட்டுவிடுவீர்கள்.
நீங்கள் இசை அமைத்த பாடலே
சொல்கிறது
தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல்
தோன்றி வந்தவைதான் இந்த ராகங்கள்
என்று.
"பாடறியேன் ..படிப்பறியேன்..
பள்ளிக்கூடம் நானறியேன்..."
என்று நதி மூலம் ரிஷிமூலம் என்று
எந்த மூலமுமே தெரியாத அந்த இசைகள்
உங்கள் மூலதனம் ஆகிப்போனது
இந்த கலையின் வியாபார நெடியினால்
ஏற்பட்டது தானே.
உங்கள் லாபங்களுக்கு
இங்கே யாரும் குறுக்கே நிற்கவில்லை.
அதே போல் நீங்களும்
குறுக்கே நின்று மறிக்க முடியாது.

பல்லாயிரக்கணக்கான ராகங்கள்
விண்ணில் மிதக்கின்றன.
தூண்டில் மட்டுமே உங்களுடையது.
இசையின் நாகரிகத்தை
ஒரு சிகரத்துக்கு கொண்டு சென்றீர்கள்.
ஆனால் ஒரு நாகரிகத்தின் இசையை
எங்கோ குப்புறத்தள்ளியிருக்கிறீர்கள்
என்று
உங்களுக்கு புரியவில்லையா?
திருவிளையாடலில்
டி எஸ் பாலையா அவர்கள்
காட்டிய அபிநயம் தான்
உங்கள் சொற்களில் நர்த்தனம்
ஆடுகிறதோ
என்ற ஐயமே எங்களுக்கு ஏற்படுகிறது.
அவருடைய கர்வமே அவருக்கு ஏழிசை.
உங்களுடைய  கர்வம்
நீங்கள் மட்டும் தான்!

சன் டிவியின் "லேசர் பிழியல்களில்"
உங்கள் இசையின் "ஜிலேபி"பிழியல்களும்
எங்களை திக்கு முக்காட வைக்கின்றன!
இசை ராஜா அவர்களே
உங்களுக்கு
எங்கள் கோடி கோடி...கோடி
நமஸ்காரங்கள்!

=========================================================




2 கருத்துகள்:

காரிகன் சொன்னது…

நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். சில மேதைகள் பேதைகள் போல பேசுவது வேடிக்கைதான்

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

கருத்துரையிடுக