புதன், 6 மார்ச், 2019

நெட்டிசன்களும் சிட்டிசன்களும்


நெட்டிசன்களும் சிட்டிசன்களும்
===============================================ருத்ரா


நெட்டிசன்களே
நீங்கள் ஒரு விழிப்புணர்ச்சியை
டிஜிடல் உலகம் வழியாய்
ஏர்படுத்த நினைக்கிறீர்கள்.
அதில் கூட‌
படிக்கவே கூசுகின்ற‌
விழிப்புணர்ச்சிக்கு எதிரான‌
குருட்டு வெறி உணர்ச்சிகள்
நிரம்பி வழிகின்றன.
அதிலும்
சமுதாய மாற்றத்திற்கான‌
சித்தாந்தங்களை
உங்களால் அதில்
பதியம் இடவே முடியாது.
இளைஞர்கள் மனத்தில்
தீப்பிடித்துக்கொண்டிருப்பது
சினிமா ஹீரோக்கள் மட்டுமே.
இவர்களை வழிபடுபவர்களின்
பலூன்கள் மட்டுமே பறக்கின்றன.
ட்ரென்டிங் ஆனால் போதும்
வைரல் ஆனால் போதும்
இந்த வெளிச்சத்தில் தான்
இருட்டு சிந்தனைகள் கூட‌
தினம் தினம் உங்களுக்கு
விடியல்கள் ஆகின்றன.
இன்றைய கால கட்டம்
ஓட்டுகளை எல்லாம் வெறும்
தூண்டில் இரைகளாக்கி
ஏமாற்றும் ஒரு ஜனநாயக விளையாட்டு
அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

நெட்டிசன்களே
நீங்கள் சிட்டிசன்களை
உலக மானுட யுக மலர்ச்சிக்கு
வார்த்தெடுக்க வேண்டிய நிலையில்
இருக்கிறீர்கள்.
இன்றைக்கு அதற்கு
எதிராக இருப்பது
கார்ப்பரேட் முறை சுரண்டல் தந்திரங்கள்.
அதற்கு உதவும்
ஊடக சாணக்கியங்கள்.
சாதி மத கட்டமைப்புகளையே
கட்சியாக வளர்த்து
அந்த ஆலையின் பற்சக்கரங்களில்
மக்களை மாட்டி
சக்கையாக பிழிந்து கொண்டிருக்கும்
அவலங்களைப்பார்க்கிறோம்.
நாட்டின் சொத்துக்கள் எல்லாம்
ஒரு ரெண்டு மூணு விழுக்காடு
தனிநபர்களால்
விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கும்
ஒரு மலைப்பாம்பு பொருளாதாரத்தின்
மேல் தோல் வண்ண வண்ணப்புள்ளிகளே
இவர்கள்
வழங்கும் இலவசங்கள் நலத்திட்டங்கள்
இத்யாதி இத்யாதி எல்லாம்.
எனவே
உறுதியாக முறியடிக்கப்படவேண்டிய‌
சித்தாந்தம்
இவர்களின் "சித்தாந்த வறுமையே"
வறுமையின் சித்தாந்தம் அல்ல.
மக்கள் ஒரு ராத்திரியில்
கன்னா பின்னா வென்று ஆடும்
கஞ்சா நடனத்தில் தியானம் செய்து
ஒரு சொர்க்கலோகம் போவதே
இந்த 130 கோடி மக்களின்
பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு
என்று கூறும்
தலப்பா கட்டு சாமியார்கள் போன்றவர்களே
ஆட்சி செங்கோலின் மேல்
ஈக்கள்போல் 
மொய்த்துக்கிடப்பதால் தான்
சமதர்ம மனித நீதி
கும்பமேளா சாக்கடைக்குள்
அமிழ்ந்து கிடக்கிறது.

நெட்டிசன்களே
முதலில் இந்த சிட்டிசன்களின்
இதயங்கள் புகுந்து
மலர்ச்சியின் ட்ரெண்டை
வைரல் ஆக்குங்கள்.
அப்போது தான் சமுதாயத்தின்
வைரஸ்கள் (புற்று நோய்க்கிருமிகள்)
அழித்து ஒழிக்கப்பட முடியும்.

================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக