ஞாயிறு, 10 மார்ச், 2019

கை விளக்கும் கமலும்

கை விளக்கும் கமலும்
=============================================ருத்ரா


கைப்புண்ணுக்கு கண்ணாடியா
வேண்டும்?
முகம் பார்க்கத்தானே கண்ணாடி!
நாட்டின் சமுதாய அவலங்களை
அறிந்து கொள்ள‌
பூதக்கண்ணாடியா வேண்டும்?
கமல் அவர்களே!
கை விளக்கே போதும்
என்று சொல்லிவிட்டீர்களே.
உங்கள் மதி நுட்பம்
நாடறியும் ஏடறியும்.
இருப்பினும்
நாலு எருதுகள் ஒன்றுசேர்ந்து
சிங்கத்தை விரட்டிய‌
பாலபாடத்தை
அக்கு வேறு ஆணி வேறாய்
பிரித்து பிரித்து
படித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
தனித்தனியாய்
இந்த ஓட்டுகளை பிரித்துப்பார்த்து
புடம் போட கிளம்பிவிட்டீர்கள்.
காற்றிலிருந்து
நூல் பிரித்து வடம் முறுக்கி
இழுத்து விளையாடும்
ஒரு தேர் கொண்டு வந்திருக்கிறீர்கள்
இந்த ஊழல் எனும்
அரக்கனை வதம் செய்ய.
அந்த தேர்மேல் இருந்து கொண்டு
பாஞ்சஜன்யம் ஊதுவதே
ஊழல் பள்ளியெழுச்சிப்பாடல்கள் தான்.
அதற்காக‌
ஊழலை ஒழிக்கும் போர்ப்படலத்தை
நாம் நிறுத்திக்கொள்ள முடியாது தான்.
நீங்களும்
படம் எடுத்து தான் பாருங்களேன்
இந்தியன் 1 2 3 4...என்று.
சும்மா ஓட்டுப்போடவே
உள்ளங்கை அரிக்கும் நம் மக்களுக்கு.
"என்று தணியும் இந்த‌
"கரன்சிகள் தாகம்"?
என்று மடியும் இந்த
அடிமைகளின் மோகம்?"
என்று முண்டாசு கட்டி
மீசை முறுக்கி
நீங்கள் பாடி பரவசம் அடையுங்கள்!
சொந்த மொழி தமிழில் பேசுவதற்கும்
இவர்களுக்கு
சமஸ்கிருத அர்ச்சனைச்சீட்டுகள்
வாங்கியே பழக்கம்.
நீங்களோ இப்போது
திராவிடத்தின் திறந்த எதிரியாய்
தமிழின் மறைமுக எதிரியாய்
ஆகி விட்டீர்கள்.
மண்ணின் மக்கள் தங்கள்
மொழியின் மாண்பையே
ஒடித்துச்சிதைத்து
அதில் ஒரு சவப்பெட்டி செய்துகொள்ளும்
அளவுக்கு "மரத்துப்போவது" போன்ற‌
ஒரு "வரலாற்று ஊழல்"
நிகழ்ந்து கொண்டிருக்கும்போது
மற்ற ஊழல்கள் எங்கே
கண்ணிற்குத்தெரியப்போகிறது?
கை விளக்கே போதும்
என்ற களிப்பில் இருக்கிறீர்கள்.
இதைக்கொண்டு
விடியும் சூரியன் மீதே
விளக்கை அடித்து
கண் கூசச்செய்துவிடலாம்
என்ற‌
ஒரு அதிமேதாவித்தனமான‌
அல்லது
அறிவு ஜீவித்தனமான‌
பிள்ளை விளையாட்டை ஆட‌
தேர்தல் ஆணையத்தின்
விசிலுக்கு காத்திருக்கிறீர்கள்.
"விசில்களின்" இயக்கம்
தியேட்டர்களில் வேண்டுமானால்
எதிரொலிகளை உருவாக்கும்.
மக்களின் அடிமனத்தில்
அது பூகம்பங்கள் ஏற்படுத்திவிடுமா?
பார்ப்போம்.
பொறுத்திருந்து பார்ப்போம்.

==============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக