சனி, 16 மார்ச், 2019

பொள்ளாச்சி

பொள்ளாச்சி
===============================================ருத்ரா

மின்னணு உலகம்
உருவாக்கிய‌
குகைகளில்
மீண்டும் ஒரு கற்காலம்.
தொலைபேசி என்றாலே
பணக்கார வர்க்கத்தின்
அடையாளமாய் இருந்ததை
தூக்கியெறிந்தது
அந்த "பூலியன் அல்ஜீப்ரா."
ஆனால்
கைபேசிக்குள்
இந்த காமத்தின்
காண்டாமிருகங்கள்
குடியிருக்க‌
காரணமாய் இருந்தது
கார்ப்பரேட் மிருகம்.
ரூபாய்க்கு இத்தனை ஜிபி ஃப்ரீ
என்று
வியாபாரத்தைக்குவித்தது அது.
இந்த ஈசல்களும்
பட்டாம்பூச்சிகளும்
அவர்களின் "லாபத்தீயில்"
கருகி விழுகின்றன.
காமப்பசியை காசாக்கும்
இந்த மனித மிருகங்களுக்கு
எத்தனை எத்தனை
பாதுகாப்புகள்?
யாரைச்சொல்வது?
பணம் குவிக்கும் பணியில்
அரசியல் நடத்திக்கொண்டிருக்கும்
அறம்பிறழ்ந்த
அரசு எந்திரங்களா?
நிழல் தேடி அலையும்
அப்பாவிப்பறவைகள்
தங்கள் சிறகுகளையே
கொளுத்திக்கொண்டு
குளிர்காய நினைக்கும்
அவலங்களை உருவாக்கும்
சூழல்களா?
சினிமாக்களின் சிங்கார ஜிகினாக்களில்
கலைத்தாகம் சிகரம் ஏறியபோது
அங்கே அவை  உடம்பு நெளிப்புகளின்
குத்தாட்டங்களாய் குறுகி
கடைசியில்
ஒரு முட்டுச்சந்தில் முடங்கி வீழ்கின்ற
இளமையின் ஆளுமைகளா?
இல்லை
ஓட்டுக்கு துட்டு கிடைத்தால் சரி
என்று மரத்துப்போன
ஒரு ஜனநாயகத்தின்
சிதிலங்களா?
இல்லை..
இதையே ஊடகத்திரைகளில்
கழுவி கழுவி ஊத்தி
காசு பார்க்கும் அதே
கார்ப்பரேட்டுகளின்
ரகசியமான நோய்பிடித்த‌
கொடுங்கைகளா?
எது காரணம்?
பத்திரிகைகள் பெருமையாக‌
பீற்றிக்கொண்டன‌
அந்த செல் கம்பெனியின்
ஒரு  "க்யூ"வின் லாபக்குவிப்பு
பத்தாயிரம் கோடி என்று!
சமுதாயத்தின் நொறுங்கிப்போன‌
கபாலங்களின்
குப்பைமேட்டில் தான்
இந்த வளர்ச்சி எனும்
முள்ளின் கள்ளிகள் செழித்து
வளரவேண்டுமா?
சிந்தனை வறண்ட மக்களே!
மழுங்கிப்போன
சமுதாயக்கட‌மையின் சித்தாந்தங்கள்
கூர் தீட்டப்படும் வரை
இந்த கொடுமைகளே
கொடி கட்டிப்பறக்கும்.
உங்கள் கோவில்களும் கொடிமரங்களும்
சாதி மதங்களின்
கொடிய அரக்கர்கள் கையில்
சுருண்டுகிடக்கும் வரை
இந்த சுரண்டல் வெயிலில்
சுருண்டு கிடக்கும்
புழுக்களாய்த்தான்
துடித்துக்கொண்டிருப்பீர்கள்.
இப்போதாவது
விழித்தெழுங்கள்
ஒரு புதிய யுகம் நோக்கி!

================================================================





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக