வெள்ளி, 8 மார்ச், 2019

எரிபட்டன்ன குண்டுநீர் நீழல்

எரிபட்டன்ன குண்டுநீர் நீழல்
==============================================ருத்ரா இ பரமசிவன்

பாசிலை வற்றல்  அடர்க்கான் பொரிய‌
வரிசினை அரிநிழல் வருடை ஏய்ப்ப‌
திருக்கிய மருப்பின் பொறிமான் நிழல்படூஉம்
அத்தம் நண்ணிய தீச்சுரம் ஏகினான்
வெம்மை நோன்று உயிர் நைந்தனையோ?
கழை திரள் தோளும் கவிமஞ்சு வானும்
கலந்த மன்றன் வால் தேயாநின்ற அல்கறு நடையில்
கால் பாய்ந்தன்ன பரல் படுத்த சிறுகல் இடறி
கள்ளி முள்ளின் விரல்கள் செத்த மரல்கள் மறிய‌
நீள் ஆறு போகிய‌ கள்செறிவுறு அவன் விழிப்பூ ஊடி
எல்லும் ஒளித்தனை.இருளும் மறந்தனை.
இறைமுன் நெகிழ்தரு பொலனிழை கலிக்கும்
ஓதை நெறிக்க ஒள்முகம் மெலிய‌
அவிர் அழல் வாட்டும் அம்மன் ஆம்பல்
எரிபட்டன்ன குண்டுநீர்  நீழல்
குய்புகை ஊட்டும் நின் கண்ணீர் மழைக்கண்
அறியா நிலையில் ஆறு பட்டனன்
பொருள்வயின் போந்த நின்
திண்ணிய கழலன் பாலையின் ஏகி.

=================================================

பொருளுக்காக வெங்காடு ஏகிய தலைவனை நினைத்து
வாடும் தலைவிக்கு தோழி ஆறுதல் கூறும் நிலை பற்றிய‌
சங்கநடைச்செய்யுட் கவிதையை இங்கு நான் எழுதியிருக்கிறேன்.

=============================ருத்ரா பரமசிவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக