ஞாயிறு, 17 மார்ச், 2019

நெரிசல்

நெரிசல்
================================ருத்ரா

முகமூடி போடத்
துவங்கி விட்டோம்.
தூய காற்றை வடிகட்டி
மூக்குக்குள் பிடிக்க.
எங்கோ பாறையிடுக்குகளில் கூட‌
ஓடி ஓடி
ஆறாய் நீராய்
நமக்கு
ஓட்டுப்போடச்சொல்லாமலேயே
இலவசம் தந்த
இயற்கையின் பளிங்குநீர்
பட்ட பகலிலேயே கொள்ளைபோனது
பாட்டில்களில்.
மனித உறுப்புகள் கூட‌
கிலோவுக்கு பத்து ரூபாய் என்று
தருகிறோம்
வாங்கிக்கொள் என்கிறது
கோரமுகம் காட்டும் வறுமை.
கோபுரங்களும் கலசங்களும் கூட‌
நம்மை நசுக்கிக்கொண்டே
முண்டியடித்து
மந்திரங்களை காறி காறி
துப்புகிறது
கொஞ்சம் கூட நாம்
சிந்தித்துவிடக்கூடாது என்று
நம் அறிவின் இண்டு இடுக்குகளில்.
கொண்டாடுவதற்கு ஏற்பட்ட‌
திருவிழாக்கள்
நெரிசல் எனும் பற்சக்கரங்களில்
மக்களை சாறு பிழிந்து
ராட்டினங்கள் சுழற்றுகின்றன.
கவலையைத்தீர்க்கக்கூட‌
கியூவில் நின்று அல்லவா போய்
கும்பிடவேண்டும்
என்றே ஒரு
"பெருங்கவலை"
ஆயிரம் அடி உயரத்து சிலையாய்
நின்று தலை சுற்ற வைக்கிறது.
மனக்கவலை மாற்றலரிது
என்றான் வள்ளுவனும் கவலையுடன்.
மனங்களின் நெரிசல் இது.
தெளியவைக்கும் அறிவை நோக்கியே
நாம் செல்லவேண்டும்.
வெறும் வழிபாடுகளில்
தேக்கமடைந்து எண்ணெய்ப்பிசுக்கு ஏறிய‌
நம் மைல்கற்களை அகற்றி
நாம் நடைபோடவேண்டும்.

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக