விடியட்டும் பார்ப்போம்.
====================================ருத்ரா
விடியல் தேடும்
விளிம்பு வானம்
வியர்த்ததோ?
ஓலையின்
விசிறிக்கீற்றால்
விசிறிக்கொண்டதோ?
வெள்ளி உருக்கிய
வெளிச்சம் கொண்டு
கொலுசுமணிகள்
கோர்த்துக் கொண்டதோ?
விண்மீன் துடிப்புகள்
விண்டு காட்டியும்
விளங்க வில்லையே.
இருட்டு பூசிய
வெளிச்ச முகமா?
வெளிச்சம் கரைந்த
இருளின் முகமா?
முகமே இல்லா ஒரு
மூளிச்சிரிப்பு
மூலையில் கேட்குது!
மூண்டு எரியும் தாகம் தன்னை
கிழக்கில் முடக்கிய
தடம் தெரிந்த போதும்
ஒரு குரல் கேட்டேன்.
தேடல் எனும் தீப்பொறி தேடி
ஆடல் ஓடல் நாடல் எல்லாம்
ஆயிரம் செய்கிறாய்?
இதயத்துக்கு இதயம்
"இஞ்ச்" தூரம் கூட
இல்லையே மனிதா!
கோடி மைல் தூரம் கொண்டு
கூடுகள் கொண்டாய்.
தீவுகள் கொண்டாய்.
மனிதர்கள் கொண்டு
கட்டிய கோபுரம்
கண்ணுக்கு தெரியலையே.
வெறுங்கற்களும்
பொய்ச்சொற்களும் கொண்டு
பிளவு பட்ட உள்ளத்திலா
விடியலை நீ தேடுகின்றாய்?
விடிவது கூட மீண்டும்
இருட்டத்தான்.
பிறப்பது கூட
இறப்பதற்குத்தான்.
இருக்கும்
இண்டு இடைவெளிக்குள்
கண்டு தெளிவது
எந்நாளோ?
கேள்விகள் தான்
வெளிச்சம் என்றால்
விடைக்கும் வரை
கேள்..கேள்..கேள்.
கேள்விக்கு கூட இங்கு
கேள்வியே
விடையாகும்.
கடவுளுக்கு மனிதன் இங்கு
கேள்வியா?விடையா?
விடியட்டும் பார்ப்போம்.
========================================ருத்ரா
மீள்பதிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக