ஞாயிறு, 3 மார்ச், 2019

காகித ஆயுதங்களே!

காகித ஆயுதங்களே!
===========================================ருத்ரா

தேர்தல் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன.
இன்னும் தேர்தலுக்கு
பஞ்சாங்கம் பார்த்து
என்றைக்கு நாள் குறிக்கலாம்
என்றால்
அதற்கும் இந்த ஜோஸ்யர்கள்
நாள் குறிக்க‌
சோழிகள் குலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
பகை மேகங்களும் சூழ்ந்து கொண்டதால்
நம் பாரதத்தின் குருட்சேத்திரத்துக்கு
நாள் குறிக்க‌
அந்த நகுல சகாதேவர்களுக்கு
ஆள் அனுப்பியிருக்கிறார்கள்.
எதிரியின் வியூகம் நுழைந்து
அடித்து நொறுக்கிய‌
நம் வீரப்புதல்வன்
அபினந்தனுக்கு மணிமகுடம் சூட்டினால் என்ன?

என்ன காரியம் செய்யத்துணிந்தீர்கள்!
என்று ஆளும் வியாசர்கள் கொந்தளிக்கிறார்கள்.
ஏன்?
அவருக்கு முதுகுத்தண்டில் கீழ்ப்பகுதியில்
காயமாமே.
சரி போகட்டும்.
தேர்தல் "ஆனையம்" வரட்டும்.
ஏதாவது ஒரு ஆனயின் தும்பிக்கையில்
மலர் மாலை தருவோம்!
அந்த ஆனை கூட வெர்ச்சுவல் ரியாலிடியில்
வரைந்த யானையாய் இருந்தால்
என்ன செய்வது?
ஏதாவது ரிஷியின் அதர்வ மந்திரம் மூலம்
ப்ரோக்ராம் பண்ணி
பழைய ராஜாவே பதவிக்கு வந்து விட்டால்
என்ன செய்வது என்று
எதிர்க்கூடாரங்கள் சலசலக்கின்றன.
ஏற்கனவே காணும் இடங்களெல்லாம்
"பண முடிப்பு"களை வீசியெறிந்து
இந்த "ஜனங்களையெல்லாம்"
விட்டில் பூச்சிகளாக்கும்
பிரம்ம வித்தையை பிரயோகித்து
ஓட்டுப்பெட்டிகளை நிரப்பிக்கொள்ளும்
சாணக்கியங்களை கையில் வைத்துக்கொண்டு
பழைய ராஜா
நல்ல காலம் வருகுது
நல்ல காலம் வருகுது
என்று
குடு குடுப்பையை
ஆட்டிக்கொண்டிருக்கிறார்.
அதனால்
ஓ! அன்பான ஜனங்களே!
ஓட்டுகள் எனும்
காகித ஆயுதங்களைக்கொண்டு
உங்கள் கனவுகளுக்கு
உயிர் வரச்செய்யும் மந்திரங்களை
உச்சாடனம் செய்யுங்கள்!
அது என்ன?
மாற்றம் தான்.
ஏமாற்றங்களுக்கு மாற்றாக‌
நீங்கள் சிந்திக்கும்
கூர்மையான மாற்றம் தான்!
இது வரை
அந்தக் கணினிகளைக்கொண்டு
"கேம்ஸ்" விளையாடியது போதும்.
சமுதாய மாற்றம் எனும்
ஒரு புதிய "பூலியன் அல்ஜிப்ரா"வை
இந்த கணினிக்குள் புகுத்திவிடுங்கள்.
வெற்றி நமதே!

===================================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக