வாழை
____________________________________
சொற்கீரன்.
இழிவுகளையும் துயரங்களையும்
அவலங்களாக
மொத்தக்குத்தகை எடுத்திருக்கும்
அடிநிலை விவசாயக்கூலி வர்க்கம்
இன்னும்
சேற்றுக்குள் அழுந்திக்கிடப்பது தான்
யதார்த்தம் என்று
சும்மா தூசியை தட்டிவிட்டுச்செல்லும்
வெள்ளைக்காலர் சட்டைகள்
அல்லது
கலர் கலராய் டி ஷர்ட்டுகளில்
மிரட்டும் சுலோகன்களை கவ்விக்கொண்டு
அலையும் கனவுகளின்
பஞ்சுமிட்டாய் பூவேந்திகளின்
இளைய ஏந்தல்களுக்கு
"வாழை"
இமை விரியவைக்கும்
படம் தான்.
சிறகு முளைத்த பன்றிக்குட்டியின்
உருவகம்
இங்கு வாழைத்தார்கள் தான் போலும்.
துன்பியல் கூறுகளுடன்
விடலை தாகத்தின்
இன்பியல் பட்டாம்ப்பூச்சிகள்
திரை மறைப்பில்
பொன் கீற்றுகளாய்
படர்ந்த போதும்
அந்த "விபத்து"
கோரமான
ரத்தச்சிலந்தியாய்
கோடுகளை கீறல்களாக்கி
திரைக்கதையை
மரணக்கோபத்தின்
உறைவில்
சாதி வெம்மையை
கல் பாக்கம் கால் பிளந்துகொண்டு
கதிர் பீய்ச்சியது போல்
திடுக்கிட வைத்திருக்கிறது.
வாழைச்சிப்பங்களின்
தலைச்சுமையில்
பச்சை பச்சையாய்
அந்த செங்கொடித்தாகம்
தீப்பற்றிக்கொண்டிருப்பதாய்
சூடு உறைத்த போதும்
நம் விடியல் சேவல்கள்
காலொடிக்கப்பட்டு
கழுத்துகள் திருகப்பட்டு
கிடப்பதை
இவ்வளவு நுண்ணிய அணுக்கத்தில்
காமிராக்குஞ்சுகளின்
அகலப்பிளந்த அலகுகளுக்கு
தீனியாய் ஊட்ட்த்தெரிந்த
வல்லமை
மாரி செல்வராஜுக்கு மட்டுமே உண்டு.
சினிமாவின் தரம்
பல சிகரங்களை நொறுக்கித்தள்ளிவிட்டு
உயர உயரத்தெரிகிறது
என்ற போதிலும்
மேலை நாட்டு ஆஸ்கார்களின்
விழித்திரைகள்
இன்னும் அந்த ஒரு
விவரமற்ற "க்ளாகோமா"வில் தான்
அல்லாடுகின்றன என்று
நமக்கு புரிகிறது.
இந்த சினிமா பார்த்த கூட்டத்தில்
எங்கேனும் ஓர் இடத்தில்
"சத்ய ஜித் ரே"உட்கார்ந்திருந்தால்
நாம் சொல்ல நினைத்தது
வெறும் காடும் அந்த சிறுபிள்ளைகளும்
மட்டும் தானா?
அவர்கள் தலையில் உள்ள அந்த
இன்விசிபிள் சித்தாந்த சுமையை
இன்று தான் நான்
ஏற்றியிருக்கிறேனோ
என்று மனம் கசிந்து கொண்டிருக்கலாம்.
நம் மண் கொதிப்படையும்
அதிர்வு எண்கள்
இந்த மானிட அடக்குமுறை
அநியாயங்களை
எவ்வளவு தான்
மூக்கைச்சுற்றி முகத்தைச்சுற்றிக்
காட்டினாலும்
சமுதாயத்தின் அந்த ஊமை வலியை
காட்டத்தான் செய்கிறது.
நாம்
நெஞ்சைப் பிடித்துக்கொள்கிறோம்.
வேறு என்ன செய்ய?
________________________________________________________