கரப்பான் பூச்சியும் சுவர்ப்பல்லியும்
______________________________________________________
ஒரு "ஸ்ட்ரிங் தியரி"க்காரன்.
வயதுகள்
மாணிக்க இலைகள்.
ஒவ்வொன்றாய் உதிர்ந்து விழ விழ
நம் தராசு தட்டுகள்
ஆடுகின்றன.
சமநிலைக்கு வர
ஒரு பக்கம் ஆசைகள்.
இன்னொரு பக்கம் அவலங்கள்.
இரண்டும் சமம் என்று நிற்கின்றனவே.
எப்படி?
சரி..மாற்றி யோசிப்போம்.
ஆசையை அவலமாக கொள்வோம்.
அவலங்களை ஆசையோடு
அணைத்துக்கொள்வோம்.
இப்படி..
ஒவ்வொன்றாய் நிறுத்து ஆகி விட்டது.
கண்ணீருக்குள்
சிரிப்புகள் புகுந்து கொண்டன.
துன்பங்களில்
இன்பத்தின் மயிற்பீலிகள்
வருடி விட்டன.
அப்படியே
பிறப்பில் இறப்பு.
இறப்புக்குப்பின்னும்
பிறப்பு..
என்ன இது?
புத்தகங்கள் படிக்கத் தந்தனர்.
ஆனால்
காகிதங்களையெல்லாம்
கிழித்துக்கொண்டிருக்கிறேன்.
சரி..கோவிலுக்குச்சென்றேன்.
கற்சிலைக்குள் நான்.
என் உடம்போ இறுகிக்கல்லாய்
இற்று விழுந்தது.
ஒன்றை ஒன்று சமப்படுத்துவதில்
இத்தனை இருக்கிறதா?
போதும்.
வயதுகள் வயதுகளுக்குள்ளேயே
வட்டம் போட்டுக்கொண்டிருக்கட்டும்.
கனமான
அந்த ராமாயணப்புத்தகத்துக்கு
அட்டை போட்டுக்கொண்டு
கம்பரசம் நொதிக்க நுரைக்கப்
படித்தேன்.
ஆறரை வயது சிறுவனாய்
சோப்புக்குமிழி ஊதி ஊதி
விளையாடுகின்றேன்.
இப்போது
டோபாலஜிகல் ஸ்பேஸ் கணிதத்தில்
பனக் ஸ்பேஸும் ஹில்பர்ட் ஸ்பேஸுமாய்
பின்னிக்கொண்ட
உருவத்துக்கு வந்து உட்கார்ந்து கொண்டேன்.
மெய்யை பொய்யால் அல்லது கற்பனையாய்
சுருட்டி மடக்கி மீண்டும் மீண்டும்
உள்ளுக்குள்
ஆகாயத்தையும்
ஒடுங்கிக்கிடக்கும் வீட்டுக்கூட்டையும்
ஒன்றாய்
புள்ளிகள் வைத்து வளை கோட்டுக்குள்
கோலம்போட்டு
பார்த்து பார்த்து மகிழ்ந்தேன்.
அலக்ஸாண்டர் ஃப்ரைடுமேன் வரைந்த
ஸ்ஃபெரிகலையும் ஹைபர்போலிக்கையும்
என் உள்ளங்கை அண்டத்துள்
வைத்துக்கொண்டேன்.
அண்டம் பிண்டம் ஆற்றல்
அதையெல்லாம் விடுங்கள்.
அதிர்வு...துடிப்பு
எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட பல
பரிமாணங்களில்
நெளிந்து நெளிந்து இழையங்கள்
ஆகின்றன.
இந்த காஸ்மிக் நரம்பு அதிர்வுகளில்
ஒரு சிம்ஃபோனி ஒலி
மழை தூவிக்கொண்டே இருக்கிறது.
இதில்
காதல்
கத்தரிக்காய்
மற்றும்
உப்பு புளி மிளகாய்க் கவலைகளையும்
குவார்க் அல்லது குளுவான்
என்று சொல்லிக்கொள்ளவேண்டும்.
நம் கணித மேதை
ராமானுஜம் அவர்களின்
சொப்பனத்தில்
நாமக்கல் கோவில் தாயார் தெய்வம்
ஐநூறு அறுநூறு கணித தேற்றங்களை
டிக் டேட் பண்ணிவிட்டு
போய்விட்டதாமே.
இன்னும் ஐநூறு ஆண்டுகளுக்குப்பின் தான்
இந்த உலக கணித மேதைகளின்
மூளைக்குள் அவை
உதயமாகுமாம்.
குறிப்பாக அந்த மேதை
இன்ஃபினிடி எனும் நுண்ணிய ஆனால்
பிரமாண்ட கணிதத்தை
"மாடுலர் ஃபங்க்ஷன்" மூலம்
பிச்சு பிச்சு போட்டுட்டாராமே.
அவர் மூளைக்குள்ளே அவரே போய்
அமர்ந்து கொண்டு
ஒரு "மாக் தீட்டா ஃபங்க்ஷன்"மூலம்
மடித்து வைத்துக்கொண்டாராம்.
அவர் விட்டுப்போன அந்த தகர ட்ரங்க் பெட்டி
நோட்டு
இன்னும் இந்த உலகை
புரட்டி புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது.
உயர் மேல் அதிர்விழைய கோட்பாடு
எனும் "சூப்பர் ஸ்ட்ரிங்க் கோட்பாட்டில்"
மில்லியன் மில்லியன் பிரபஞ்சங்களையும்
ஒன்றாய்க்கோர்த்து விடலாமாமே.
அந்த ஒப்பற்ற மனிதன் ராமானுஜன்
இப்படி எல்லாவற்றையும்
சமப்படுத்திக்கொள்ள
அந்த அறிவியல் தராசுவை தூக்கி
நிறுத்தப்போய்
எல்லாம் சமம் சமம்...
சமப்பாட்டைத்தவிர வேறு ஏதும் இல்லை.
நாமக்கல் நாமகிரித்தாயாரிலிருந்து
சாதி நமைச்சல்களின்
மிக மிகக்கீழ்த்தட்டு
அடுக்கு வரை எல்லாமே
ஒன்று தானே!
அப்புறம் என்ன?
.....................................
இப்போது அந்த
கரப்பான் பூச்சியும் சுவர்ப்பல்லியும்
என்னோடு
செஸ் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
வயதுகளா?
அந்த கண்ணாடி சில்லுகளில்
ஆயிரம் ஆயிரம் விண்வெளிகள்.
________________________________________________________
ஒரு ஸ்ட்ரிங் தியரிக்காரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக