அந்திக்கரை
_______________________________________
கல்லாடன்.
வாழ்க்கையின்
அந்திக்கரைச்சிவப்பில்
அலைகள் மெல்ல மெல்ல
அந்த சிறு சிறு நண்டுகளைப்போல்
கால்களைக் கவ்விக்கொள்கின்றன.
எங்கே உன் கனவுகள்?
தர்ப்பணங்கள் கொடுக்க
தவறாமல்
தர்ப்பைப்புல்லோடும்
தட்சிணைகளோடும்
வந்து விடுகிறாயே.
முன்னோர்கள் இருக்கட்டும்.
உன் பின்னோர்கள்
இன்னும் பின் தங்கியே இருக்கிறார்களே
அவர்கள் சிந்தனைகள்
பழம் கருத்துக்களால்
துருப்பிடித்து
உரு இற்றுக்கிடப்பது எப்போதாவது
உன்னை சீண்டியிருக்கிறதா?
அவர்களில்
சிலர் என்ன சிலர்
பலர்
அந்த பச்சைக்கவுச்சி வீசிய
எண்ணங்களை பளிச்சென்று
துடைத்து அழித்துப்
புடம் போட்டு வைத்திருக்கிறார்களே
அதன் ஓர்மை
உன் குறுக்கிழை நெட்டிழையை
பின்னி வைத்து
நெசவு செய்திருப்பதை நீ
அறிவாயா?
அங்குலம் அங்குலமாக நகரும்
மரவட்டையாய்த்தானே
இத்தனை நாளாக ஊர்ந்து வந்திருக்கிறாய்.
உன் முதுகுக்குப்பின்னே
ரயில் விடுவது போல் விளையாட வந்திருக்கும்
இந்த இளந்தலைமுறைகளின்
வேகமோ
மில்லியன் மில்லியன்
ஒளியாண்டுகளாய்
பாய்ச்சல் காட்டுகிறதையும்
உன் அந்திவானச்சிவப்பில்
ஓவியம் தீட்டிக்கொள்.
உன் பிஞ்சு மழலையின்
விளையாட்டுப்பொம்மைப்பெட்டிக்குள்
அதோ கிடக்கிறதே
குவாண்டம் என்டாங்கில்மெண்ட்
அது
உன் உலகத்தை அடையாளமே
மாற்றிவிடும்படியாய்
டிங்கரிங் செய்து விட்டது.
ஒரு பிரபஞ்சத்தை ஊடுருவி
இன்னொன்றுக்குள்
நுழைய
அதற்கு அமாவாசைகளும்
காக்கைக்கு வைக்கும் பிண்டங்களும்
மந்திரங்களும் தேவையில்லை.
உன் வயதுகள் கரைந்துகொண்டிருக்கும்
இந்த சாயுங்காலத்தில்
நிமிர்ந்து பாயும் உன் நிழல்கள்
அந்த புதிய தலைமுறைகளில்
பொங்கிப்பூரிப்பதை
நீ உணர்.
இதுவே உன் மரண மறுப்பு
அல்லது எதிர்ப்பின்
முதல் அத்தியாயம்.
கருடபுராணங்கள் உன்னைக்கொத்தி
ரத்தச்சேற்றில் தள்ளிவிடும் முன்
உன் சிந்தனையில் இந்த
புதிய புயல் மூச்சை
இழுத்து
அறிவின் ஒரு கூரிய அம்பை
எய்து விடு.
________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக