புதன், 19 ஜூன், 2024

எலியட்டுக்கு அது போதும்.

  எலியட்டுக்கு அது போதும்.

__________________________________________

சொற்கீரன்



பாழ்நிலங்கள் என்ற தலைப்பில்

டி எஸ் எலியட்

மனம் வெதும்பியிருக்கிறார்.

இந்த முட்காட்டில்

எந்த ரோஜாவுக்காக

நீங்கள் எலும்புக்குவியலாய்

நொறுங்கிக்கிடக்கிறீர்கள்?

சொற்கள் தானே

அவைகள் உளிகளா என்ன‌

என்று

அலட்சியமாக 

நீங்கள் 

கடந்து போய்க்கொண்டிருக்கலாம்.

ஆனால் அந்த சிற்பங்கள்

நம் மனத்துக்குள் எல்லாம்

ரத்தம் வடித்துக்கொண்டிருக்கிறதே..

இதோ இந்த உலகம்

இப்படித்தான் முடிந்து போகப்போகிறது

என்று...

ட்ரம்ஸ் அடிக்கிறானே!

அது அச்சமா?

நம்பிக்கையின் கருச்சிதைவா?

கனவுகளின்

காகிதக்கசக்கல்களா?

இன்று ஜேம்ஸ்வெப் தொலைநோக்கிகள்

நம் முதுகுத்தண்டில்

சில்லிட வைக்கும் கோட்பாடுகளை

ஊற்றிக்கொண்டே இருக்கிறது.

என் செந்தமிழ்த்தினவுகள்

அந்த செவ்வாய்க்கோளின்

கருப்புக்குழிக்குள்

நம் வேர்ப்பிடிப்புகள் 

இருக்கின்றன என்று

கட்டுரைகள் எழுத வெறியேற்றுகின்றன.

அசட்டு அறிவுகளின் அரிப்புகள்

எங்கெல்லாம் 

கரையான் புற்றுகளாய் 

வால்மீகிகளை

கருவுற்றிருக்கும் என்பதையும் 

சொல்ல முடிவதில்லை.

அவன் கூட தமிழ் இலக்கியத்தின்

மரவ மரத்தையும் (மரா மரங்கள்)

குரவ மரத்தையும் 

தழுவிக்கொண்டு ஓடி 

அம்பு விட்டிருக்கிறான்.

கவிஞன்

மனிதனை "உட்கூடு"அற்றவன்

என்று ஹால்லோ மென் என்றானே.

அண்டத்தின் அந்த கடைசி

சிவகாசி வெடி வெடிப்பதற்குள்

நீ 

சிரித்து விடு.

எலியட்டுக்கு அது போதும்!


________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக