நீராரும் கடலுடுத்த
நெடும்பேர் உலகமிது.
இனமென்றும் மொழியென்றும்
கோடுகளின் சிறைக்குள்ளே
பூட்டிக்கொண்ட உலகமிது.
முடிந்தவர்கள் முடியும் வரை
அள்ளிக்கொண்டபூமியிலே
மிஞ்சிய தெலாம் வெறும்
எலும்புக்கூட்டு கார்ட்டூன்கள்
உலவுகின்ற உலகமிது.
உலகப்பொது மானிடமும்
உலகப்பொது வாழ்க்கையுமே
அன்பென்றும் பண்பென்றும்
அணிவகுத்துக்கொண்டதில்லை.
அணுகுண்டு தோரணங்கள்
அலங்கரிக்கும் அரசியலில்
விஞ்ஞான அறிவுகளும்
கணினிகள் என்கின்ற
நத்தைக்கூட்டுக்குள்
நாவடங்கி பேச்சடங்கி
செயற்கை மூளையென்ற
செப்பு விளையாட்டில்
வணிகம் மட்டுமே
செழித்தோங்கச் செய்ததனால்
மனிதம் எனும் வெளிச்சம்
மங்கியே போனதுவே.
போர்வணிகப் புகைமூட்டம்
பூதமாய் கிளம்பியதால்
அமைதிப் புறாக்கள்
சிறகடிக்க அஞ்சினவே!
அகம் பூத்து புறம் பூத்து
தமிழ் பூத்த புத்தொளியின்
தேசம் ஒன்றுண்டு.
உலகத்தீரே!உலகத்தீரே!
ஒரு சொல் கேளீர் உலகத்தீரே!
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர் தொகுத்தவற்றுள்
எல்லாம் தலை" என்று
ஒலித்த தேசம் அது.
இன்றும் எல்லார்க்கும்
ஒளி காட்டும் தேசம் அது.
வாழிய செந்தமிழ்!
வாழ்க நற்றமிழர்!
செந்தமிழ்
நாடெனும் போதினிலே
புல்லரிக்கும் புல் கூட
எங்கள் தேசம்.
___________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக