வியாழன், 13 ஜூன், 2024

புன்னகைக்கீறல்

 புன்னகைக்கீறல்

_________________________________________‍‍‍‍‍‍‍
கல்லாடன்.
பை நிறைய நட்சத்திரங்கள் தான்.
மடிக்குள் மடங்கிக்கிடப்பதும்
வானங்கள் தான்.
இருப்பினும்
பிச்சுவாக்கள் போல்
குத்திக்கொண்டிருக்கும் மவுனம்.
முகத்தை திருப்பிக்கொண்டாளே
மெரீனா பொன் மணலை
அளைந்து கொண்டிருந்த‌
அந்த செங்காந்தள் விரல்களுக்கு
என் தொடுகையால் அலர்ஜியா
வந்து விடும்
விலுக்கென்று எழுந்து கொண்டாளே.
கொலுசுகள் என்று
எதுவும் அணிந்திருக்கவில்லை.
அப்படியிருந்தும்
இனிய பரல்களின் தேனிசை
எங்கிருந்து கேட்கிறது.
தெருவின் தூசிகள் கூட‌
இவளுக்கு எப்படி அந்த‌
துள்ளல்களில் துடிப்பான‌
இசை அமைப்புகளை
கோர்த்துத் தருகிறது.
வள்ளுவர் வேலையில்லாமல்
எழுதவில்லை
அத்தனை வைரத்தனமான‌
ஊடல் பற்றிய குறள் வரிகளை.
டிஜிடல் யுகத்திலும்
கோபமான கிராஃபிக்ஸ்களை
அவள் பொய் நிழல்களால்
புண்படுத்திக்காட்டுகிறாள்.
பெண்ணே!
சிறு புன்னகைக்கீறல் ஒன்று
கடனாக இன்று தா.
என் இருதயம் இத்துடன்
நின்று கொள்ளப்போகிறேன்
என்று சொல்வதும்
உனக்கு கேட்கவில்லையா?
____________________________________________________
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

மிகவும் தொடர்புடையவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக