ஈரோடு தமிழன்பன் அவர்களே...06.06.2024
----------------------------------------------------------------------
கவிதை
புன்னகையை
வாடகைக்கு கேட்டது.
புன்னகை
கவிதையை
இரவல் கேட்டது.
இப்போது கோவில்கள்
வெறுமையாகி விட்டன.
கடவுள்கள் அவ்விரண்டையும்
ஒத்திக்கு
ஒப்பந்தம் போடக் கேட்டன.
இப்போது பாருங்கள்
எங்கும் எதிலும்
வேலிகள் இல்லை.
இருட்டுக்கள் எல்லாம்
வெளிச்சத்துக்குள் போய்
ஒளிந்து கொண்டன.
ஈரோடு தமிழன்பன் அவர்களே
புன்னகை பற்றி நீங்கள்
எழுதியது
என்னை இந்தப்பாடு படுத்திவிட்டது.
சொற்களில் இடறி சொற்களிலேயே
விழுவது தானே கவிதை.
ஈரோடு தமிழன்பன் எனும்
கவிதைச்சிகரமே
நீங்கள் எழுதும்போது பேனைவை
உதறிக்கொள்ளுவதை நிறுத்திவிடாதீர்கள்.
அந்தச்சொட்டுகளில்
எத்தனை ஊறுகின்றன
கடல்கள்?
________________________________________________________
கல்லாடன்
_______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக