பனை உயரக் கள்ளிகள்
முளைத்த அமெரிக்க
அரிசோனா மண்ணில்
தேடுகின்றேன் ஒரு நீலவானத்தை.
ஏன்
வானம் எங்கே போயிற்று?
அதன் வெட்டவெளி நீலமும்
பறவை வரிசைகளின் கோடுகளும்
எங்கே தான் போயின?
கொஞ்சம் பொறுங்கள் என்று
செயற்கை மூளையின் தூரிகையால்
இன்னொரு வானம் தீட்ட
ஆயத்தம் செய்யப்போயிருக்கிறது
புதிய விஞ்ஞானம்.
ஹைட்ரஜன் குண்டுகளால்
இந்த அழகிய பூமி
அம்மை வடுக்களாய் அசிங்கப்பட்டு
போய் விடுமோ?
உயிர்ப்பூண்டுகளே அன்று
இந்த பூமிப்பந்து
ஒரு மலட்டுக்கோளமாய்
மடிந்து விடுமோ?
ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி
ஒன்றை கண்டுபிடித்திருக்கிறது.
அதன் உயர் நுட்பக்
கண்ணாடிக்கன்னங்களில்
தூசி படர்ந்தது போல்
ஒரு படலம் ஒட்டியிருக்கிறதாம்.
பொருள் திணிவும் இன்றி
வெறும் வெளியும் இன்றி
விசைச்சுவடுகளும் இன்றி
காலம் என்ற நிகழ்வோ அசைவோ
ஏதும் அற்றதாய்
ஆனால் எதோ ஒன்று
இருப்பதாய்க்கண்டு பிடித்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக