என் காதலியை நான் இன்னும்
தேர்ந்தெடுக்கவே இல்லை!
காற்று வெளியிடை...
என்றல்லவா சொன்னான் பாரதி.
நுரையீரல் என்னும்
என் காற்றுப்பைக்குள்
காலண்டர் தாள்களின் குப்பைகள்
மண்டிக்கிடக்கின்றன.
தொப்பை வயிறும் குடுமியுமாய்
இருக்கிற ஒரு பஞ்சாங்கன்
டேய்
வீமகண்டம் வந்து விட்டதடா
இனி என்ன செய்யப்போகிறாய்?
களத்திரத்துக்கு
ப்ராப்தம் இல்லையே என்று
சொல்லிவிட்டுப்போய்விட்டான்.
நானும்
விடிவெள்ளி முளைக்கின்ற
அந்த வானத்தில் சோழிகள்
குலுக்கி குலுக்கிப்
போட்டுக்கொண்டிருக்கிறேன்.
அந்த விண்மீன்கள்
சிரித்துக்கொண்டே இருக்கின்றன.
பேப்லோ நெருதா
கீட்ஸ்
இன்னும் நம்
வானம்பாடிக்கவிஞர்கள் எல்லாம்
எழுத்துக்களின்
மரண மகரந்தங்களில்
இந்த அண்டத்தை
ஜனித்து ஜனித்து
நெருப்புச்சத்தங்களை
வாரி இறைத்திருக்கிறார்களே
ஒன்று கூடவா
முளை காட்டவில்லை?
தாடி மீசையுடன் ஊர் ஊராய்ச்சுற்றி
மஞ்சப்பைக்குள்
அந்த கவிதைக்காகிதங்களில்
தன் சுவாசங்களை சுமந்து திரிவாரே
அந்த "விக்கிரமாத்தித்தன்கள்"கூட
காதல் இல்லாத ஒரு காதலுக்கு
கல்யாணித் தீர்த்த அருவித்திவலைகளில்
சூரியனின்
ஏழுவர்ண ரத்தம் பருகிக்கொண்டிருப்பாரே...
எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
மனதுக்கு ஒரு
நிழல்
கிடைக்கும் என்று.
________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக