செவ்வாய், 11 ஜூன், 2024

ஈரோட்டுத்தடங்களில்....

 



ஈரோட்டுத்தடங்களில்....

_________________________________________

கல்லாடன்.


ஈரோடு தமிழ் அன்பன் அவர்களே


உங்கள் சொற்களுக்குப்பின்னே

ஒளிந்து கொள்ளவும் வரவில்லை.

உங்கள் நிழலை

என் மீது சாயமேற்றிக்கொள்ளவும்

எண்ணம் கொண்டதில்லை.

ஒரு கவிதையின் லேபிள்

அந்த கவிஞர் தான்.

அந்த லேபிளை உரித்துவிட்டு

ஒரு நிர்வாண ஊர்வலம் நடத்தும்

ஆபாசவாணன் இல்லை நான்.

உங்கள் கவிதையின் சொற்றொடர்களுக்குள்

இருக்கும் 

கல்பாக்கங்களிலிருந்து

கல்லை உரித்து அந்தக்கதிர் வீச்சின் 

அழகு பார்ப்பவன் நான்.




_______________________________________________________________


எழுதப்படாத
கவிதைகளைத் தொகுத்து
வெளியிடவேண்டும்
என்பது அவன் ஆசை,கனவு,தவம்.
எழுதப்பட்டு வெளிவந்திருந்தால்
அவன் கவிதைகள்
பற்றிய திறனாய்வுநூல்கள்
பாடமாகி வகுப்பறைகளில்
ஒருவேளை
உறங்கும் மாணவர்கள்
பைகளில் உறங்கக்கூடும்.
எழுதப்பட்ட கவிதைகள்
வினாத்தாள் பகுதிகளிலிலிருந்து
விலக்கினாலும்
விலக்கப்படிருக்கலாம்.
மனப்பாடப் பகுதியில்
முள்முள்ளாய் முளைத்து மாணவர்
ஞாபகங்களைக்
குத்திக்கொண்டிருக்கலாம்.
பத்திரிகை விமர்சனப் பகுதியில்,
பொதுப் பிணியாளர் கூடத்தில்
கேட்பாரின்றிக்கிடக்கும்
நோயாளிபோல்
முனகிக்கொண்டிருக்கலாம்
பின்னூட்டம்
ஒன்றும் பெறாத முகநூல்பதிவு
நெரிசலில்
மூச்சோய்ந்து போயிருக்கலாம்
அதில் முகம் காட்டியிருந்தால்.
மகப்பேற்றுப்
பிரிவில் சேர்க்கப்பட்ட பெண்
கருச்சிதைவை எதிர்கொண்டு
கண்ணீர் சிந்துவதுபோல
அச்சுக்குப் போன
அவலக் கவிதைகள்
அவசரஅஞ்சலில்
வீடு திரும்பும்--
அதற்குத்தேவையானஅளவு
அஞ்சல்தலையோடு
உறை உள்ளே வைக்கப்பட்டிருந்தால்.
;
எனினும்
அவனுக்குத் தெரியும்..
காலத்தை வெல்லும்
கவிதைகளின்
வரலாறு உலகமெங்கும்
இப்படித்தான்!
ஆனால்
காலத்துள் பந்தாடப்படுபவன்
கவலையை
எங்கே விரட்டியடிப்பான்?
எழுதப்படாத
கவிதைகளை எவன் தொகுப்பான்?
எவன் வெளியிடுவான்?
எல்லாம் நடக்கக் கூடியவையா?
தலை கவிழ்ந்த
தன்னம்பிக்கையும் தானுமாகச்
சிலையின் பீடத்திலிருந்து
எழுந்தான்;
"நமக்குத்தொழில் கவிதை
எழுதடா புலவா!"
அதிர்ந்துபோய்த்
தலைநிமிர்ந்து பார்த்தான்.....
ஆயிரம் வியப்புகளின் நாயகன்
பாரதி!
அவன் தோள்தொட்டுப்
பேசினவன்
வீடுவரை பேசிக்கொண்டே
வந்தான்.
அவன்
சிலைக்குத் திரும்பிப்போய்ச்
சேர்ந்த போது
விடிந்துவிட்டது
எழுதப்படாத தன் கவிதைகளைக்
கவிஞனே
தொகுக்கத்தொடங்கினான்.
-------+++-+++++++++++++++++++++----++++
சிலைக்குத்திரும்பிய பாரதி
12-05-2024 இரவு9-30

______________________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக