சனி, 8 ஜூன், 2024

குழந்தை எனும் மலிவுப்பதிப்பு


ஒரு குழந்தை
சிரிப்பின் ஊடாக நான் பயணித்து
ஒரு மலரின் முற்றத்தை
அடைகிறேன்.
அப்படியே
ஒரு மழலை ஓடையின் ஒரு
மெல்லிய சொல்லைத் திறந்து
கடலின்
ஆரவாரக்கொண்டாட்டத்தில்
பங்கேற்கிறேன்.
என் மனமும் கடலின்பரப்புக்கு
இசைவாக விரிகிறது.
ஒரு வீட்டுக்குள்
சுருக்கப்பதிப்பான அறைக்குள்
அமர்ந்து கொண்டு
பூமியே பெரிதென்றுபேசுகிறவன்
பூமியின் உரிமையை
ஆறு அடிஅளவில்
சுருக்கிக் கொள்ளவேண்டியவனாகிறான்.
எல்லா இடங்களிலும்
உரிமைபாராட்டாமல் பத்திரம் எழுதிப்
பதிவுசெய்யாமல்
உலா வரும் காற்றுக்கு
உடம்பும்இல்லை
ஒடுக்கிமுடக்கும் கல்லறையும்இல்லை
ஒரு குழந்தை
கண்களுக்குள் நான்மெல்ல நுழைகிறேன்
கோடி மழைத்துளிகள் கூட்டிசையில்
ஓரிடம் கிடைக்கிறது.
இசைமேதைகள்
ஏழிசைச் சுற்றுமதிலைத் தாண்ட
முடியாமல்
சறுக்கிவிழும்போது
கையிலிருக்கும் சரிகமபதநிகள்
நழுவி விழுவதைத் தடுக்கமாட்டாமல்
தவிக்கிறனர்.
என்
தொட்டில்நாள்களைத் தேடி
ஓட ஓடக்
குழந்தையாகி
அம்மாவின் தாலாட்டுக்குள்
எந்த இலக்கண
நூற்பாவுக்குள்ளும் இல்லாத
அன்பின் இசையில்
கரைந்துபோகிறேன்.



_____________________________________________________________________________


குழந்தை எனும் மலிவுப்பதிப்பு ______________________________________________ கல்லாடன்.
நம் நாட்டில் மலிவு பதிப்புகளாத்தான் போனது இது. இந்த புத்தகத்திருவிழாவில் தாயின் கருப்பைகளும் அவள் மசக்கை வழியல்களும் அந்த ஏழு அல்லது எட்டு மாத சடங்கில் கருப்பு வளையல்களோடு மரண ஒத்திகையை மஞ்சள் பூசி மங்கலம் ஆக்கி கண்ணீர் முட்டும் மூக்கு நுனிகளில் ஆனந்தக்கண்ணீர் என்று எழுதி ஒட்டும் எழுத்துக்களும்... நிறைய நிறைய அடுக்கி வைக்கப்படுகின்றன. அவள் சானிடரி நாப்கின் கூட‌ அவள் புத்தகக்கூட்டில் சிறகடித்துக்கொண்டு... தேசிய இலக்கியத்துக்கு விருது வாங்கிக்கொடுக்கும் எழுத்துக்களை உதறி விட்டுக்கொண்டு... அந்த புத்தகவிழாவாய் புன்னகைகளை நாற்றுப்பாவும் அந்த தாயின் அரங்கேற்றமாய்.. இன்னும் என்ன தான் சொல்வது? தன்னையே பிறப்பித்துக்கொண்டு தன் கண்ணாடி பிம்பங்களுக்குள்ளேயே ரத்த சதை நாளக்கொடிகளை சுற்றிக்கொண்டு... கடவுள் களைத்துப்போய் விட்டார் அவரை விட்டு விடுங்கள். சோப்புக்குமிழி புராணங்களில் வர்ணம் காட்டி விளையாடியது போதும். இதை இன்னும் தீட்டுச்சிறையில் பூட்டும் திருட்டு சித்தாந்தங்கள் சத்தமில்லாமல் அச்சேறி மனிதத்துக்கு படு குழி வெட்டும் மரண சாசனங்களாய் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள் போல் நம்மீது இறைந்து கிடக்கின்றன. குழந்தைகள் கூட‌ கழுதையைப்போல் குட்டியில் அழகாகத்தான் இருக்கின்றன. வளர்ந்து முதிர்ந்து வளைந்தபின் தேடுகின்றன‌ தன் முதுகெலும்புகளை. அலப்பறைகளில் அழிந்து மக்கிக்கிடக்கும் கடவுள் எனும் புத்தகங்களும் கரையான்களுக்குத்தான் தீனி. குழந்தையாய் இருக்கும் போது குழந்தைக்கு தெரியவில்லை தான் இன்னும் ஒரு எரிமலையின் கரு தான் என்று. அந்த எரிமலையை எப்போது நாம் தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடப்போகிறோம்? ______________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக