வெள்ளி, 14 ஜூன், 2024

பலூன்காரன்

 பலூன்காரன்

________________________________‍

கல்லாடன்.




எங்காவது 

கோயில் திருவிழா என்றால்

இந்தக் காற்றுக்குமிழிகளில் தான்

என் வியாபாரம்.

தூங்குகையில் வாங்குகிற மூச்சு

சுழி மாறிப்போனாலும் போச்சு

என்று சொல்லத்தான்

அந்த சாமி

கொட்டு அடித்துக்கொண்டு

நாதஸ்வர பீப்பிகளில்

எச்சில் தெறித்தபோதும்

ஆலாபனை செய்து கொண்டுவரும்

நாதப்பிரம்மத்தை

தூவிக்கொண்டு சப்பரத்தில் வருகிறார்.

மரண வாக்குமூலத்தை

மகரந்தங்களாய்

உற்சாக இனிப்பு தடவி

மக்கள் எனும் குமிழிகளை கூட்டம் கூட்டி

நாலு காசு பார்க்கும் 

வாய்ப்பு கொடுக்கிற சாமிக்கு

முதல் கும்பிடு

அப்போதே போட்டுவிட்டேன்.

வண்ண வண்ணமாய் 

ஆகாயத்தை கூறுபோட்டு

நூலில் கட்டி பறக்கவைத்து

கம்பில் மாட்டிக்கொண்டு நிற்கிறேன்.

சிறுவர்களும் சிறுமிகளும்

சிள் வண்டுகளாய்

சுற்றி மொய்க்க‌

எனக்கு நானே கிரீடம் சூட்டிக்கொள்வேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக